கோவை வடவள்ளியில் ரூ.5 லட்சம், 2 துப்பாக்கிகள் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி
கோவை வடவள்ளியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி ரூ.5 லட்சம், 2 துப்பாக்கிகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
வடவள்ளி,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் அல்லது பரிசு பொருட்கள் கொண்டு செல்ல தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.
இதற்காக பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையை அடுத்த வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் பறக்கும்படை அதிகாரி ராஜேஸ்வரி, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜோசப் பாபு மற்றும் போலீஸ்காரர்கள் ரங்கசாமி, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவர்கள், அந்த வழியாக வந்த தனியார் நிறுவன வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், அந்த வாகனத்தில் ரூ.5 லட்சம் மற்றும் 2 துப்பாக்கியுடன் காவலாளிகள் இருந்தனர். இது பற்றி அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொன்னுசாமி (வயது 40), நாகராஜன் (39), சபாதிகான் (27), கங்காதரன் (32), உதயா (22) என்பதும், ரூ.5 லட்சத்தை கணபதியில் இருந்து இருட்டுபள்ளத்தில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித் தனர்.
ஆனால் அவர்களிடம் பணம் கொண்டு செல்வதற்குரிய ஆவணங்கள் இல்லை என்பதும் உரிமம் இன்றி 2 துப்பாக்கிகளையும் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story