இதுவரை சின்னம் எங்களுக்கு கிடைக்காததால் எந்த வருத்தமும் கிடையாது சாருபாலா தொண்டைமான் பேட்டி


இதுவரை சின்னம் எங்களுக்கு கிடைக்காததால் எந்த வருத்தமும் கிடையாது சாருபாலா தொண்டைமான் பேட்டி
x
தினத்தந்தி 29 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

இதுவரை சின்னம் எங்களுக்கு கிடைக்காததால் எந்த வருத்தம் கிடையாது என புதுக்கோட்டையில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் கூறினார்.

புதுக்கோட்டை,

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் நேற்று புதுக்கோட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான தட்சிணாமூர்த்தி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து தட்சிணாமூர்த்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இதுவரை சின்னம் கிடைக்காததால், இந்த சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனக்கூறாமல் டி.டி.வி. தினகரனுக்கு ஓட்டு போடுங்கள் என்று வாக்காளர்களிடம் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு சில வாக்காளர்களுக்கு சாருபாலா தொண்டைமான் சால்வை அணிவித்து வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து சாருபாலா தொண்டைமான நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் மன்னர் பரம்பரைக்கு எப்போதுமே விசுவாசமாக இருந்து உள்ளது. ஆகையால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் என்னை ஆதரித்து வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இதுவரை சின்னம் எங்களுக்கு கிடைக்காததால் எந்த வருத்தமும் கிடையாது. எந்த சின்னம் அளித்தாலும், நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவது உறுதி. டி.டி.வி. தினகரன் தான் எங்களுடைய சின்னம்.

திருச்சி எம்.பி.யாக இருந்த குமார் நான் மன்னர் பரம்பரை இல்லை என கூறி உள்ளார். அது மக்களுக்கு தெரியும். மன்னர் பரம்பரை மருமகள் என்பது அனைவருக்கும் தெரியும். 2 முறை எம்.பி.யாக இருந்த குமார் திருச்சி தொகுதியில் என்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் என்பதை அவர் கூற வேண்டும் என்றார். அப்போது அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story