வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கியாஸ் சிலிண்டர்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டும் பணி
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் கியாஸ் சிலிண்டர்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.
புதுக்கோட்டை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி திருவப்பூரில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் கியாஸ் சிலிண்டர்களின் மீது வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமா மகேஸ்வரி தலைமை தாங்கி விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18–ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், மாரத்தான் போட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி போன்ற பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கியாஸ் சிலிண்டர்களின் மீது வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் இன்று (நேற்று) தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 887 எண்ணிக்கையிலான கியாஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வழங்கல் அதிகாரி ராதா ஜெயலட்சுமி, தாசில்தார்கள் பரணி, சோனைகருப்பையா, கிராம நிர்வாக அதிகாரி வசந்தகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.