வருமான வரி சோதனைக்கு எதிராக தர்ணா போராட்டம்: முதல்-மந்திரி குமாரசாமிக்கு எடியூரப்பா கண்டனம்


வருமான வரி சோதனைக்கு எதிராக தர்ணா போராட்டம்: முதல்-மந்திரி குமாரசாமிக்கு எடியூரப்பா கண்டனம்
x
தினத்தந்தி 29 March 2019 4:00 AM IST (Updated: 29 March 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரி சோதனைக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்திய முதல்-மந்திரி குமாரசாமிக்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

வருமான வரி சோதனைக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்திய முதல்-மந்திரி குமாரசாமிக்கு எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

ஏற்றுக்கொள்ள முடியாதது

வருமான வரித்துறையினர், தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கர்நாடகத்தில் இன்று (அதாவது நேற்று) சோதனை நடத்தினர். இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. ஏற்றுக்கொள்ள முடியாதது.

வருமான வரி சோதனையை, ஒரே இரவில் திட்டமிட்டு நடத்த முடியாது. இதற்காக பல்வேறு தகவல்களை திரட்ட வேண்டும். இதற்கு பல நாட்கள் ஆகும். நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

பிரச்சினையை கிளப்பவில்லை

இந்த சோதனை மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ. அல்லது அரசியல் தலைவர்களின் வீடுகளில் நடைபெறவில்லை. தொழில் அதிபர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் தான் சோதனை நடைபெற்றது. ஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் சந்தேகத்தின் பேரில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இது சரியல்ல.

கடந்த காலங்களில் கர்நாடகத்தில் பா.ஜனதா நிர்வாகிகளின் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதுபற்றி நாங்கள் எந்த பிரச்சினையும் கிளப்பவில்லை. குமாரசாமியின் பேச்சு, வருமான வரித்துறைக்கு நேரடியாக மிரட்டல் விடுப்பதாக உள்ளது. மேலும் சட்டத்தை கையில் எடுக்கும்படி தூண்டிவிடுவதாகவும் குமாரசாமியின் பேச்சு அமைந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோதமானது

இதற்கிடையே தலைமை தேர்தல் அதிகாரியிடம் பா.ஜனதாவினர் நேற்று ஒரு மனுவை கொடுத்தனர். அதில், “உரிய முன் அனுமதி இல்லாமல், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி இருப்பது சட்டவிரோதமானது. அதில் பேசியவர்கள், பிரதமர் மோடியை மிக மோசமாக விமர்சித்து பேசினர். எனவே, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story