ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை வழக்கு: தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் கைது போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்,
கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் சன் ராஜேந்திரன் (வயது 43). இவர் சூலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளராக உள்ளார். இவர் கடந்த 8-ந் தேதி, சென்னையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடந்த வேட்பாளருக்கான நேர்காணலுக்கு சென்றார். இவருடன் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினரும், இருகூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான இருகூர் சந்திரன்(65), மாவட்ட துணை செயலாளர் கபிலன் ஆகியோர் சென்றனர்.
அங்கு நேர்காணல் முடிந்ததும் 10-ந் தேதி இரவு நீலகிரி விரைவு ரெயிலில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் பயணம் செய்த பெட்டியில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பயணம் செய்தார். ரெயில் நள்ளிரவு ஜோலார்பேட்டையை தாண்டி சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ரெயில் பெட்டியில் இருந்தவர்கள் தூங்கி கொண்டு இருந்தனர்.
அப்போது ரெயில் பெட்டியில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிக்கு சன் ராஜேந்திரன் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கர்ப்பிணி சேலம் ரெயில்வே கோட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே இருகூர் சந்திரன், கபிலன் ஆகியோர் புகார் கொடுக்க கூடாது என அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ரெயில் சேலம் ஜங்சனுக்கு வந்ததும், அந்த பெட்டிக்கு ரெயில்வே போலீசார் சென்று நடந்தது என்ன? என்பது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது அந்த கர்ப்பிணி நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட போலீசார் அவர்களை சமாதானம் செய்ததுடன், சன் ராஜேந்திரனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி மீண்டும் அந்த பெண் சேலம் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சன் ராஜேந்திரன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு சூலூருக்கு சேலம் ரெயில்வே போலீசார் சென்று இந்த வழக்கு தொடர்பாக இருகூர் சந்திரனை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி கைது செய்தனர்.
இதனிடையே ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத சேலம் ரெயில்வே போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story