நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல்காந்தி 31-ந்தேதி பெங்களூரு வருகை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்


நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல்காந்தி 31-ந்தேதி பெங்களூரு வருகை பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
x
தினத்தந்தி 29 March 2019 4:00 AM IST (Updated: 29 March 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக நாளை மறுநாள்(31-ந்தேதி) ராகுல்காந்தி பெங்களூரு வருகை தருகிறார். அன்றைய தினம் அவர் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக நாளை மறுநாள்(31-ந்தேதி) ராகுல்காந்தி பெங்களூரு வருகை தருகிறார். அன்றைய தினம் அவர் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

ராகுல்காந்தி பெங்களூரு வருகை

கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 7 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 18-ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்திற்கு வந்திருந்தார். அன்றைய தினம் கலபுரகி மற்றும் பெங்களூருவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் கலந்து கொண்டு பேசி இருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக 2-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராகுல்காந்தி பெங்களூருவுக்கு வருகைதர உள்ளார்.

தேவேகவுடாவுடன் பிரசாரம்

அன்றைய தினம் மாலை 4 மணியளவில் பெங்களூரு புறநகரில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேச உள்ளார். இந்த கூட்டத்தில் தேவேகவுடா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பதால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பெங்களூரு, பெங்களூரு புறநகர், துமகூரு தொகுதிகளின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் செய்ய இருப்பதாக காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வருகிற 31-ந் தேதி தவிர கர்நாடகத்தில் 4 அல்லது 5 தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேச இருப்பதாகவும், அதற்கான தேதி மற்றும் இடங்கள் குறித்து அடுத்த மாதம்(ஏப்ரல்) 3-ந் தேதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவர் எச்.கே.பட்டீல் தெரிவித்துள்ளார்.

Next Story