நாடாளுமன்ற தேர்தலுக்காக மராட்டியத்தில் 8 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு 1-ந் தேதி வார்தாவில் பிரசாரம்
நாடாளுமன்ற தேர்தலுக்காக மராட்டியத்தில் 8 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 1-ந் தேதி வார்தாவில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலுக்காக மராட்டியத்தில் 8 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். 1-ந் தேதி வார்தாவில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
மராட்டியம் வருகை
மராட்டியத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 11, 18,23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக நடக்கிறது. முதல் 2 கட்டத்துக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததை அடுத்து அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசார வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி மராட்டியத்தில் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் வார்தா தொகுதியில் வருகிற 1-ந் தேதி பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மராட்டியம் வருகிறார். தற்போதைக்கு 4 கட்ட தேர்தலுக்கு தலா 2 பொதுக்கூட்டங்கள் வீதம் 8 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறார். ஆனால் 3 மற்றும் 4-ம் கட்ட தேர்தலின் போது இதைவிட அதிக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
தனித்தனியே பிரசாரம்
இந்த முறை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக தனித்தனியாக பிரசாரம் செய்கின்றனர். நாங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். இருவரும் சேர்ந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதை விட தனித்தனியாக பங்கேற்கும் போது அதிக பகுதிகளில் பிரசாரம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பை தொகுதி
முன்னதாக மும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பதை பற்றி கேட்டபோது, “ மும்பையில் ஒரு பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரேயுடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார்” என கூறினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மும்பையில் உள்ள 6 தொகுதிகளிலும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story