தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள் கலெக்டர் ராமன் பார்வையிட்டார்


தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்கள் கலெக்டர் ராமன் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 28 March 2019 10:30 PM GMT (Updated: 28 March 2019 9:42 PM GMT)

தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வேலூரில் பள்ளி மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டார்.

வேலூர், 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு துறைகள் மட்டும் அல்லாமல் தனியார் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சி வேலூரில் நேற்று நடந்தது.

வேலூர் கிரீன் சர்க்கிள் சர்வீஸ் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த துணி பேனரில் பள்ளி மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், 100-க்கும் மேற்பட்ட ஓவிய ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தேர்தலில் வாக்களிப்பது மற்றும் வாக்கின் முக்கியத்துவம், ஜனநாயக கடமை, ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு விதமான கருத்துகளை மையமாக வைத்து ஓவியங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு, இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள், ஓவிய ஆசிரியர்களை பாராட்டினார். தொடர்ந்து தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி துணி பேனரில் வாக்காளர் கை அச்சு பதிவிடுதலை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கை அச்சை பதிவு செய்தனர்.

இதில், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ராஜன், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வேலூர் மாநகராட்சி எதிரே உள்ள வாடகை வேன்களிலும் கலெக்டர் ராமன் ஒட்டினார். பின்னர் அவர் வேலூர் பொய்கையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தனியார் நிறுவன தண்ணீர் கேன்களில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

Next Story