சுகாதாரமற்ற முறையில் தயாரிப்பு: ரெயில்நிலைய பிளாட்பார உணவகங்களில் ஜூஸ் விற்க தடை மத்திய ரெயில்வே அதிரடி நடவடிக்கை
சுகாதாரமற்ற முறையில் ஜூஸ் தயாரித்ததன் எதிரொலியாக, ரெயில் நிலைய பிளாட்பார உணவகங்களில் ஜூஸ்கள் தயார் செய்து விற்பனை செய்வதற்கு மத்திய ரெயில்வே தடை விதித்து உள்ளது.
மும்பை,
சுகாதாரமற்ற முறையில் ஜூஸ் தயாரித்ததன் எதிரொலியாக, ரெயில் நிலைய பிளாட்பார உணவகங்களில் ஜூஸ்கள் தயார் செய்து விற்பனை செய்வதற்கு மத்திய ரெயில்வே தடை விதித்து உள்ளது.
உணவகத்துக்கு சீல்
மத்திய ரெயில்வே வழித்தடத்தில், குர்லா ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பார உணவகத்தில் விற்பனை செய்வதற்காக தொழிலாளி ஒருவர் சுகாதாரமற்ற முறையில் லெமன் ஜூஸ் தயார் செய்வதை பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து மத்திய ரெயில்வே டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மத்திய ரெயில்வே அதிகாரிகள் அதிரடியாக அந்த பிளாட்பார உணவகத்துக்கு சீல் வைத்து மூடினர்.
ஜூஸ் விற்பனைக்கு தடை
இந்தநிலையில், மத்திய ரெயில்வே தனது வழித்தடத்தில் உள்ள அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களிலும் பிளாட்பார உணவகங்களில் ஜூஸ்களை தயார் செய்து விற்பனை செய்வதற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி இனி லெமன், ஆரஞ்சு, ரோஸ்மில்க் உள்ளிட்டவற்றை தயார் செய்து விற்பனை செய்ய முடியாது. பயணிகளின் கண்முன்னால் தயாரித்து கொடுக்கப்படும் கேரட், பழ ஜூஸ்களை வழக்கம் போல் விற்பனை செய்யலாம்.
இதுபற்றி மத்திய ரெயில்வே வணிக தலைமை மேலாளர் சைலேந்திர குமார் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் சுகாதாரமான முறையில் ஜூஸ் தயார் செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய ஊழியர்களை நியமிக்க முடியாது. எனவே தான் இந்த வகையான ஜூஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story