ஈரோடு அருகே பரபரப்பு அறுவை சிகிச்சை செய்த கர்ப்பிணி சாவு தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
ஈரோடு அருகே அறுவை சிகிச்சை செய்த கர்ப்பிணி இறந்தார். தவறான சிகிச்சை அளித்ததால் இறந்ததாக கூறி உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானி,
பெருந்துறை சிப்காட் அருகே உள்ள காசிபுல்லாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். அவருடைய மனைவி விஜயா (வயது 40). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக ஈரோடு அருகே நசியனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விஜயா சிகிச்சை பெற்று வந்தார்.
இதைத்தொடர்ந்து விஜயா கர்ப்பம் ஆனார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் விஜயாவின் வயிற்றில் உள்ள குழந்தை அசைவற்ற நிலையில் இருப்பதாக கூறி அவரை அதே தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஜயாவின் இதயத்துடிப்பு குறைவாக உள்ளது. எனவே அதற்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து அங்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது வயிற்றிலேயே குழந்தை இறந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உடலை டாக்டர் கள் அகற்றினார்கள்.
தொடர்ந்து விஜயாவுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்தார். இதுபற்றி அறிந்ததும் விஜயாவின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர். பின்னர் டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் விஜயா இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் அதேமருத்துவமனை டாக்டர்கள், சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘நேற்று முன்தினம் காலை விஜயா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு அவர் இறந்ததாக கூறுவதை நம்ப முடியவில்லை. தவறான சிகிச்சை அளித்ததால் தான் அவர் இறந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு டாக்டர்கள், ‘குழந்தை இறந்ததால் விஜயாவுக்கு அதிக அளவு ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ரத்தஓட்டம் சீராக இல்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்துள்ளார்’ என்றனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘இறந்த விஜயாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கை வந்த பின்னரே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். அதன்பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் விஜயாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story