ஈரோடு, அம்மாபேட்டை பகுதிகளில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.4½ லட்சம் சிக்கியது
ஈரோடு மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் நடந்த பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.4½ லட்சம் சிக்கியது.
ஈரோடு,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தேர்தல் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு பவானி ரோட்டில் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது அவரிடம் ரூ.3 லட்சத்து 32 ஆயிரத்து 600 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஈரோட்டை சேர்ந்த சிதம்பரம் என்பதும், அவரிடம் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னப்பள்ளம் பஸ் நிறுத்தம் பகுதியில், பவானி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி நாசர் அலி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையத்ஹவுஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சரக்கு ஆட்டோவில் இருந்த 2 பேர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வாங்க வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 500-யை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பவானி தாசில்தார் வீரலட்சுமி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோ ஆகியோரிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் நேற்று நடந்த வாகன சோதனையில் ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 100 சிக்கி உள்ளது.
Related Tags :
Next Story