“காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்காமல் அவரை போற்றுவதில் அர்த்தம் இல்லை”- “மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என ஐகோர்ட்டு நம்புகிறது” - நீதிபதி கிருபாகரன் கருத்து
காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்காமல், அவரை தேசப்பிதா, மகாத்மா என்று போற்றுவதில் அர்த்தம் இல்லை என்றும், மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என ஐகோர்ட்டு நம்புகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார்.
மதுரை,
தேனி மாவட்டம் கருவேலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். செங்கல் சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்தார். இவர் கடந்த 10.9.2010 அன்று மதுரை-தேனி சாலையில் கருவேலநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து அவரது இறப்புக்கு இழப்பீடு கேட்டு, முருகன் மனைவி அம்மாவாசி, பிள்ளைகள் வீரமணி, வீராசாமி, சூர்யா, தனலெட்சுமி, தாயார் கத்திரியம்மாள் ஆகியோர் பெரியகுளம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் முருகனின் குடும்பத்துக்கு ரூ.5.69 லட்சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு 2012-ம் ஆண்டில் கோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “விபத்தில் இறந்த முருகன், சம்பவத்தின்போது மதுபானக்கடை அருகில் நின்றார். அப்போது அவர் மது அருந்திவிட்டு, போதையில் இருந்ததால் தான் விபத்து நடந்துள்ளது. எனவே இதை விபத்தாக கருத முடியாது. அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்“ என்று வாதாடினார்.
அதற்கு மனுதாரர் வக்கீல் ஆர்.கருணாநிதி, “தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. பொதுமக்கள் நடமாடும் பகுதிகளிலும் இந்த கடைகள் அதிக அளவில் உள்ளன. அந்த கடைகளின் வழியாக செல்லும் அனைவரும் மது போதையில்தான் உள்ளனர் என்று கூறுவது ஏற்புடையதல்ல“ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
மதுபானம் எப்படி பல குடும்பங்களை சீரழிக்கிறது, விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் எப்படி மதுவால் பறிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு சாட்சியாக உள்ளது. பலர் போதையில் வாகனம் ஓட்டும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பதும், காயமடைவதும் உண்மையாகும். இதனால் அவர்களை சார்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மக்களின் உயிரை காப்பாற்றுவது அரசின் கடமை. 70 சதவீத சாலை விபத்துகள் மதுவினாலும், போதையில் வாகனம் ஓட்டுவதாலும் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்காமல், அவரை தேசப்பிதா, மகாத்மா என்று போற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தமிழகத்தில் 1937-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை மது விலக்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததுபோல, மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என இந்த ஐகோர்ட்டு நம்புகிறது.
இந்த வழக்கில், விபத்தில் இறந்த முருகன் குடும்பத்துக்கான இழப்பீடு நிர்ணயம் செய்வதில் தவறு நடந்துள்ளது. அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை ரூ.13 லட்சமாக அதிகரிக்கிறேன். இந்த தொகையை 4 வாரத்தில் மனுதாரர்களின் வங்கி கணக்கில் அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story