பனைக்குளம் கடற்கரையில் ஒதுங்கிய பிரமோஸ் ஏவுகணை என்ஜினால் ஆபத்தா? வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு
ராமநாதபுரம் அருகே பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய பிரமோஸ் ஏவுகணை என்ஜினால் ஆபத்து உள்ளதா என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சி புதுக்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் பிரமோஸ் ஏவுகணையின் என்ஜின் பாகம் கரை ஒதுங்கியது. இந்த என்ஜின் சுமார் 15 அடி நீளமும், அதன் வெளிப்புறத்தில் வயர் இணைப்புகளும் காணப்பட்டன. தகவல் அறிந்ததும் தேவிபட்டினம் கடலோர போலீசார் அங்கு சென்று பார்வையிட்டதுடன் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். உடனே கியூ பிரிவு போலீசார், மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து தேவிபட்டினம் கடலோர போலீசார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் டிராக்டர் மூலம் தேவிபட்டினத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த உயர் அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மூலம் சோதனையிட்டனர். அப்போது மோப்பநாய் அந்த என்ஜினை சுற்றி வந்து குரைத்தது. அதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் ஏவுகணை என்ஜினில் வெளியில் தொங்கிய வயர்களை சோதனையிட்டு ஆய்வு செய்ய சென்றனர். ஆனால் இந்த ஏவுகணையால் ஆபத்து ஏற்படுமோ? என்ற சந்தேகத்தில் அதனை மேற்கொண்டு சோதனையிடவில்லை.
மேலும் தேவிபட்டினம் கடலோர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட இருந்த அந்த என்ஜின் கடல் தண்ணீரின் அருகாமையில் இருக்கும் வகையில் அழகன்குளம்- புதுக்குடியிருப்பு இடையே கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுஉள்ளது. இதனிடையே இந்த ஏவுகணையை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விஞ்ஞானிகள் அல்லது கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மூலம் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வந்து சோதனையிட்ட பின்னரே இதன் முழுவிவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story