40 தொகுதிகளிலும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு


40 தொகுதிகளிலும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 4:15 AM IST (Updated: 29 March 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

40 தொகுதிகளிலும் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், ரெயில்வே மந்திரியுமான பியூஸ் கோயல், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் ராமநாதபுரத்தில் ஆதரவு திரட்டினர். பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மத்திய மந்திரி ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பியூஸ் கோயல் பேசியதாவது:- தமிழக வரலாற்றில் இதுபோன்ற வளமான பெரிய கூட்டணி இதுவரை அமைந்ததில்லை. கூட்டணி கட்சியினர் குடும்ப பிணைப்புடன் பணியாற்றி வருகின்றனர். தொண்டர்களின் அயராத உழைப்பால் வெற்றி பெறுவோம்.

அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரம் அமைந்துள்ள ராமநாதபுரம் தொகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம், புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளிலும் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். கடந்த 1964-ம் ஆண்டு புயலால் அழிந்த தனுஷ்கோடி ரெயில் பாதை 55 ஆண்டுகளாக சீரமைக்கப்படவில்லை. தற்போதைய பா.ஜ.க. அரசு அதனை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. பாம்பன் ரெயில் பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகிலேயே புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டங்களுக்காக ரூ.1000 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளேன். ராமேசுவரம் பகுதியை ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும் போது பூலோக சொர்க்கம் போல் தெரிகிறது. எனவே இப்பகுதியை உலகின் தலைசிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்போம். அதன் மூலம் சுற்றுலா வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகும். நீலப்புரட்சி மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும். மீனவர்களுக்காக ரூ.10,000 கோடியில் தனி நிதியம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு கிசான் அட்டை போல மீனவர்களுக்கு தனி கடன் அட்டை வழங்கப்படும். தற்போது மூக்கையூர், பூம்புகாரில் 2 பெரிய துறைமுகங்கள் கட்டப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி அரசியலில் பிரகாசிக்காததால் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி மற்றும் விமான நிலையம் அமைப்பதற்கு திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். பாம்பனில் புதிய ரெயில் பாலம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். பா.ஜ.க.வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தி.மு.க.-காங்கிரஸ் ஊழல் கூட்டணியை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “மத்திய-மாநில அரசுகளின் உதவியுடன் ராமநாதபுரத்தில் விரைவில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும்.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை வழங்கி உள்ளார். இந்த தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத்தரும் பொறுப்பாளருக்கு 10 பவுன் சங்கிலியை நானே வழங்குவேன்” என்றார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் பேசுகையில், “ஜெயலலிதாவுக்கு பின்னர் யாரோடும் ஒப்பிட முடியாத ஒரே தலைவர் மோடி.

இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. எப்போதும் திகழும். பிரதமர் மோடியின் துரித நடவடிக்கையால் 1,900 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். காசியில் (வாரணாசி) பிரதமர் மோடியும், ராமேசுவரத்தில் (ராமநாதபுரம்) நயினார் நாகேந்திரனும் வெற்றி பெறுவது உறுதி.” என்றார்.

கூட்டத்தில் அன்வர்ராஜா எம்.பி. பேசுகையில், “தற்போது தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறக்கூடிய தொகுதிகளில் முதன்மையான தொகுதியாக ராமநாதபுரம் உள்ளது. 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவது உறுதி. இவரது பெயரிலேயே இந்து-முஸ்லிம் ஒற்றுமை உள்ளது. உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி அ.தி.மு.க.-பா.ஜ.க. தான்.

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்.” என்றார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, பா.ஜ.க. மாநில துணை தலைவர் குப்புராமு, மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story