54 ஆண்டுகளுக்கு பிறகு அமைய உள்ள ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதைக்கு சர்வே பணி தொடங்கியது
54 ஆண்டுகளுக்கு பிறகு அமைய உள்ள ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதைக்கு முதல் கட்ட சர்வே பணி தொடங்கியது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி.1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய பகுதி தனுஷ்கோடி. தினமும் சென்னை, மதுரையில் இருந்து ராமேசுவரம் வரும் ரெயில்கள் தனுஷ்கோடி வரை வந்து செல்லும். ரெயில்களில் வந்திறங்கும் பயணிகள் அங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு புறப்பட தயாராக இருக்கும் கப்பல் மூலம் இலங்கைக்கு ஒரே டிக்கெட்டில் சென்று வருவார்கள்.
சிறப்பு வாய்ந்த இந்த தொழில் நகரம் கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி இரவு ஏற்பட்ட புயல்,கடல் கொந்தளிப்பால் அழிந்து போனது.மேலும் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி பகுதிக்கு சென்று மண்ணோடு மண்ணாக சேதமான நிலையில் கிடக்கும் கட்டிடங்களையும் பார்த்து செல்கின்றனர்.
புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி வரை மத்திய அரசு மூலம் ரூ.50 கோடியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தனுஷ்கோடி வரை மீண்டும் ரெயில் பாதை அமைத்து ரெயில்போக்குவரத்து தொடங்க மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியா குமரியில் நடந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில்பாதை திட்டத்தை மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் 54 ஆண்டுகளுக்கு பிறகு அமைய உள்ள ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதைக்கு முதல் கட்ட சர்வே பணி நேற்று தொடங்கியது.
அதற்காக சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் தனுஷ்கோடி ஜடாதீர்த்த பகுதியில் இருந்து கோதண்டராமர் கோவில் இடைப்பட்ட சாலை பகுதியில் நவீன கருவி மூலம் இடங்களை சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ராமேசுவரம்-தனுஷ்கோடி வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.208 கோடியில் மீண்டும் ரெயில் பாதை அமைக்கப்படஉள்ளது.இந்த பாதை ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தில் இருந்து வேர்க்கோடு மற்றும் தீயணைப்பு அலுவலகம் அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஜடாதீர்த்தம் மற்றும் தனுஷ்கோடி வரை அமைக்கப்படஉள்ளது.அதற்காக முதல் கட்ட சர்வே பணி 28-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த சர்வே பணி இன்னும் 10 நாட்களுக்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story