ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பு


ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பறக்கும் படை வாகனங்கள் கண்காணிப்பு
x
தினத்தந்தி 29 March 2019 3:30 AM IST (Updated: 29 March 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி பறக்கும் படை வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதை திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும், வாகனங்களை தணிக்கை செய்து கண்காணிக்கவும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றன.

இதைத்தொடர்ந்து தற்போது தாராபுரம், காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக தலா 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்த 16 வீடியோ கண்காணிப்பு குழுக்களுடன் தற்போது அமைக்கப்பட்டுள்ள 4 வீடியோ கண்காணிப்பு குழுக் களையும் சேர்த்து 20 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

8 சட்டமன்ற தொகுதிகளில் செயல்பட்டு வந்த பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு ஆகியவற்றுக்கான 16 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக நியமிக்கப்பட்ட 16 பறக்கும் படை வாகனங்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. அதேபோல் மதுவிலக்கு அமலாக்கத்துறை கண்காணிப்பு வாகனத்துக்கும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது.

பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் ஆகியவற்றின் வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதால் குழுக்களின் செயல்பாடுகள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு குழுக்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 6989 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கீதாபிரியா, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 

Next Story