காதல் தோல்வியால் வாலிபர் தீக்குளித்து சாவு


காதல் தோல்வியால் வாலிபர் தீக்குளித்து சாவு
x
தினத்தந்தி 29 March 2019 5:20 AM IST (Updated: 29 March 2019 5:20 AM IST)
t-max-icont-min-icon

காலாப்பட்டில் காதல் தோல்வியால் தனியார் தொழிற்சாலை ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

காலாப்பட்டு,

புதுவை பெரிய காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்த வேல்முருகன் மகன் பாலாஜி (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதுபற்றி தெரியவந்ததும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து மகளுக்கு திருமணம் செய்துவைத்தனர்.

காதல் தோல்வியால் பாலாஜி விரக்தியாக இருந்து வந்தார். தொடர்ந்து காதலியின் நினைவாக இருந்து வந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகசெட்டிக்குளம் தனியார் காப்பகம் அருகே உள்ள விவசாய நிலத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு பூச்சி மருந்தை குடித்தார். ஆனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துவிட்டார்.

இருப்பினும் தற்கொலை செய்துகொள்வதில் உறுதியாக இருந்த அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து, தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடல் எரிந்த நிலையில் வலியில் பாலாஜி அலறி துடித்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு, கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாலாஜி பரிதாபமாக இறந்துபோனார். இது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story