அரசியல் கட்சியினரின் பணம், பொருட்கள் பிடிபடவில்லை கலெக்டர் அருண் பேட்டி


அரசியல் கட்சியினரின் பணம், பொருட்கள் பிடிபடவில்லை கலெக்டர் அருண் பேட்டி
x
தினத்தந்தி 29 March 2019 5:41 AM IST (Updated: 29 March 2019 5:41 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசியல் கட்சியினரின் பணம், பரிசு பொருட்கள் எதுவும் இதுவரை பிடிபடவில்லை என்று கலெக்டர் அருண் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட 30 வேட்பாளர்கள் 37 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம், நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சோதனையின்போது ரூ.66 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் அதில் ரூ.64 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.82 ஆயிரம் மதிப்புள்ள 271 அலுமினிய பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்கள் வழங்கப்பட்டதால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 200 கட்சி துண்டுகள், 73 கொடிகள் மற்றும் 1000 எண்ணிக்கையிலான கட்சி துண்டறிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.62 ஆயிரத்து 500 மதிப்புள்ள 250 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 673 லிட்டர் மதுபானங்கள், பீர், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறை மீறல்கள் தொடர்பாக நேரடியாக சென்று கண்காணித்து வருகிறோம். அரசியல் கட்சிகள் பணம், பரிசு பொருட்கள் எடுத்து சென்றதாக இதுவரை எதுவும் பிடிபடவில்லை.

ஒலிபெருக்கி, கொடியை அனுமதியின்றி பயன்படுத்தியதாக மாகியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லாஸ்பேட்டையில் ஒரு பெட்ரோல் பங்கில் விளம்பர பலகை அகற்றப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 150 பேர் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துள்ளனர்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களில் 392 பேர் நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். ஊருக்குள் நுழைய 65 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடியும்வரை வெடிமருந்து தயாரிப்பது, சேமிப்பு, மற்றும் விற்பனை உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெடிமருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிட ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 2 தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் சக்கர நாற்காலி சகிதம் உதவிட தயாராக இருப்பார்கள். 775 பார்வையற்ற வாக்காளர்களும் உள்ளனர். அவர்களும் வாக்களிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுவை மாவட்டத்தை பொறுத்தவரை 806 வாக்குச்சாவடிகள் உள்ளன. 100 சதவீத வாக்குப்பதிவு என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதற்காக ஆங்காங்கே மாதிரி வாக்குச்சாவடிகளும், மொபைல் வாக்குச்சாவடிகளும் வைத்துள்ளோம். கடற்கரை சாலையில் உள்ள மாதிரி வாக்குச்சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 500 பேர் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பாக வாக்களித்து பயிற்சி பெற்றுள்ளனர்.

வேட்புமனு வாபஸ் நேரம் முடிவடைந்ததும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.
பேட்டியின்போது துணை மாவட்ட தேர்தல் அதிகாரி சக்திவேல் உடனிருந்தார்.

மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் நேற்று அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

புதுவை, மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 115 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் 193 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் புகார்களை அளிக்கவும் தீர்வுபெறவும் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய சி-விஜில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 28 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் அருண் கூறினார்.

Next Story