திருவண்ணாமலை அருகே கொத்தமல்லி வியாபாரியிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல் போளூரில் ரூ.62 ஆயிரம் சிக்கியது


திருவண்ணாமலை அருகே கொத்தமல்லி வியாபாரியிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல் போளூரில் ரூ.62 ஆயிரம் சிக்கியது
x
தினத்தந்தி 30 March 2019 4:45 AM IST (Updated: 29 March 2019 10:17 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே கொத்தமல்லி வியாபாரியிடம் ரூ.3½ லட்சத்தை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். போளூரில் ரூ.62 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்டறிய பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகில் உள்ள ஏந்தல் கூட்ரோடு அருகில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலை 10.30 மணியளவில் அந்த வழியாக வந்த லாரியை நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரிகள் மடக்கி சோதனை நடத்தினர். அந்த லாரியில் புதுச்சேரியில் இருந்து சூளகிரிக்கு கொத்தமல்லி ஏற்றி சென்றது தெரியவந்தது.

மேலும் லாரியில் இருந்த விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குப்பம் கிராமத்தை சேர்ந்த கொத்தமல்லி வியாபாரி முருகன் (வயது 37) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 லட்சத்து 51 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நிலை கண்காணிப்பு குழுவினர் முருகனிடம் இருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காண்பித்த பின்னர் பணம் விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரணி நாடாளுமன்ற தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் சுரேஷ் தலைமையில் களம்பூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது மினி லாரியில் வந்த கீழ்பென்னாத்தூரை சேர்ந்த பழனியிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.62 ஆயிரத்து 170 இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது, களம்பூரில் மண்ணு கவுண்டரிடம் காலி பாட்டில்கள் வாங்கிக்கொண்டு கீழ்பென்னாத்தூர் செல்ல இருந்தேன். மண்ணு கவுண்டர் ஊரில் இல்லாததால் திரும்பி செல்கிறேன் என்று கூறினார்.

அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அந்த பணத்தை போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் வழங்கி சார் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Next Story