தேர்தல் முறைகேடுகளை தடுக்க கூடுதலாக 78 பறக்கும்படை அமைப்பு


தேர்தல் முறைகேடுகளை தடுக்க கூடுதலாக 78 பறக்கும்படை அமைப்பு
x
தினத்தந்தி 30 March 2019 4:15 AM IST (Updated: 29 March 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முறைகேடுகளை தடுக்க வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக 78 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர், 

தமிழ்நாட்டில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அப்போது சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தலில், வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும், பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கவும் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 பறக்கும்படை, 3 நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தேர்தலுக்கான மனுதாக்கல் முடிந்து நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. எனவே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக வேலூர் மாவட்டத்தில் உள்ள பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு தவிர கூடுதலாக 78 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்களை கண்காணிக்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

Next Story