ஊட்டி மனித உயிரியல் நிறுவனத்தில் திறமையான மாணவ-மாணவிகளுக்கு வேலை - அரசு கலைக்கல்லூரி விழாவில் அதிகாரி தகவல்


ஊட்டி மனித உயிரியல் நிறுவனத்தில் திறமையான மாணவ-மாணவிகளுக்கு வேலை - அரசு கலைக்கல்லூரி விழாவில் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 29 March 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மனித உயிரியல் நிறுவனத்தில் திறமையான மாணவ- மாணவிகளுக்கு வேலை வழங்கப்படும் என்று அரசுகலைக்கல்லூரி விழாவில் அதிகாரி கூறினார்.

ஊட்டி,

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) ரவி அனைவரையும் வரவேற்று பேசினார். ஊட்டி மனித உயிரியல் நிறுவன பொது மேலாளர் ராகவ கோபால் கலந்துகொண்டு பேசும்போது,

இந்த ஆண்டுடன் ஓய்வு பெறும் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விழாவில் மாணவ-மாணவிகள் முன்னிலையில் கவுரவிக்கப்பட்டது பெருமைப்படக்கூடிய ஒன்றாகும். தகவல் பரிமாற்ற திறமை கொண்ட மாணவ-மாணவிகளுக்கு மனித உயிரியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்க தயாராக உள்ளோம் என்றார்.

விழாவில் இளங்கலையில் 3-ம் ஆண்டு மற்றும் முதுகலையில் 2-ம் ஆண்டு படிப்பில் இதுவரை முதல் மற்றும் 2-ம் இடத்தை பிடித்த மாணவ-மாணவிகள் 40 பேருக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டது. கல்லூரிகளுக்கு இடையே மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் மற்றும் தடகள போட்கள் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Next Story