ஆனைமலை அருகே சம்பவம் வீட்டுக்குள் நின்ற கார் திருட்டு, கேட்டை உடைத்து ஓட்டிச்சென்ற ஆசாமி - கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை


ஆனைமலை அருகே சம்பவம் வீட்டுக்குள் நின்ற கார் திருட்டு, கேட்டை உடைத்து ஓட்டிச்சென்ற ஆசாமி - கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை
x
தினத்தந்தி 30 March 2019 4:00 AM IST (Updated: 29 March 2019 11:40 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே வீட்டுக்குள் நின்ற காரை மர்ம ஆசாமி கேட்டை உடைத்து திருடிச்சென்றார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனைமலை,

ஆனைமலையை அடுத்த மீனாட்சிபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 52). இவர் அப்பகுதியில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது காரை வீட்டு காம்பவுண்டிற்குள் நிறுத்தி விட்டு தூங்கச்சென்று விட்டார். நேற்று காலை வெளியே வந்து பார்த்தபோது காரை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருமுருகன் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:- இந்த கார் திருட்டு சம்பவம் தொடர்பாக அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

திருமுருகன் வழக்கம்போல் வீட்டுக்குள் கொண்டு வந்து காரை நிறுத்தினார். ஆனால் காருக்குள்ளேயே சாவியை வைத்துவிட்டு தூங்கச்சென்றுவிட்டார். அவரது வீட்டிற்கு சிறிய, பெரிய என 2 கேட்டுகள் உள்ளன. இதில் அவர் பெரிய கேட்டை பூட்டினார். சிறிய கேட்டை பூட்டு போட்டு பூட்டவில்லை. தாழ் மட்டும் போட்டிருந்தார். அந்த கேட்டில் ஒருவர் மட்டுமே வந்து செல்ல முடியும்.

இந்த நிலையில் வீட்டின் மற்றொரு பகுதியில் உள்ள பூட்டாத சிறிய கேட்டின் வழியாக அதிகாலை 3:30 மணியளவில் லுங்கி அணிந்து வந்த ஒரு ஆசாமி, கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்று பார்க்கிறார்.

அவரது கண்ணில் ஒரு கேமரா இருப்பது தெரிந் தது. இதனால் அதனை ஓங்கி உடைத்து செயல் இழக்க வைக்கிறார். ஆனால் மற்றொரு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா அவருக்கு தெரியவில்லை. இதனை தொடர்ந்து அந்த ஆசாமி, காரின் கதவை திறந்து பார்க்கிறார். அப்போது அதில் கார் சாவி தொங்கிக்கொண்டிருந்தது. உடனே அவர் அந்த காருக்குள் ஏறி, சில நிமிடங்கள் போராடியும் காரை ரிவர்சில் ஓட்ட முடியவில்லை. இதனால் அவர் காரில் இருந்து இறங்கி ஒரு கையில் ஸ்டியரிங்கை பிடித்தபடி மற்றொரு கையால் காரை பின்னோக்கி தள்ளுகிறார்.

அதன் பிறகு காரில் ஏறி காரை அதிவேகத்தில் இயக்கி, பூட்டியிருந்த பெரிய கேட்டில் மோதி, அதனை உடைத்துக்கொண்டு காரில் வெளியேறி தப்பிச்செல்கிறார். காரை திருடி, அதனை ஓட்டிச்சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் காரை திருடிச்சென்ற ஆசாமியின் உருவம் கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

இதனால் அவர் யார்? என்பது குறித்து அடையாளம் தெரிந்தது. ஆகவே அவரை விரைவில் கைது செய்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் திருமுருகனின் கார் நின்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆயக்குடி போலீசார் காரை மீட்டனர்.

காரில் சோதனையிட்டபோது உள்ளே திருமுருகனின் ஓட்டுனர் உரிமம் இருந்துள்ளது. இந்த நிலையில் போலீசார் காரை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

Next Story