மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் நிறுவன ஊழியருக்கு 7 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் நிறுவன ஊழியருக்கு 7 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 30 March 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக் கில் தனியார் நிறுவன ஊழியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

கிருஷ்ணகிரி, 

பெங்களூரு கோனப்ப அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சம்பங்கிராமா (வயது 38). இவர் ஓசூரில் மூக்கண்டப்பள்ளியில் எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வசித்து வந்தார். இவருக்கும், பெங்களூரு அருகே உள்ள தொட்ட தொகூர் கிராமத்தை சேர்ந்த பீமாச்சாரி என்பவரின் மகள் சீதாலட்சுமி என்பவருக்கும் கடந்த 27.6.2003 அன்று திருமணம் நடந்தது. அவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சம்பங்கிராமா ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பங்கிராமாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவி மற்றும் குழந்தையை கவனிக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12.12.2010 அன்று கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சம்பங்கிராமா மனைவியை திட்டினார். இதனால் மனமுடைந்த சீதாலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து சம்பங்கிராமாவை கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சம்பங்கிராமாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story