தேன்கனிக்கோட்டையில் வெறிநாய் கடித்து 6 பேர் படுகாயம்
தேன்கனிக்கோட்டையில் வெறி நாய் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இவைகள் தெருவில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. நாய் கடியால் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பஞ்சப்பள்ளி புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளர் முருகம்மா (வயது 35) என்பவர் நேற்று கீழ்க்கோட்டை பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தெருநாய்கள் அங்கு சுற்றி கொண்டிருந்தன. அதில் இருந்து பிரிந்து வந்த வெறி நாய் ஒன்று முருகம்மாவை கடித்து குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் விரைந்து வந்து நாயை விரட்டினர். பின்னர் முருகம்மாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதே போல அந்த வெறிநாய் மேலும் 5 பேரை கடித்து குதறியது. படுகாயம் அடைந்த அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். வெறிநாய் கடித்து 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story