சாமல்பட்டியில் விவசாயி கொலை: அரூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரண்
சாமல்பட்டியில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 4 பேர் அரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
அரூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில், கடந்த வாரம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது, நடந்த கலைநிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலரை முன்வரிசையில் அமர வைத்து மரியாதை செய்தனர். அரசியல் கட்சியினரை அழைத்து வந்து மரியாதை செய்யக்கூடாது என ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே, தகராறு ஏற்பட்டது.
அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த ஜிம் மோகன் மற்றும் சிலர் அதேபகுதியை சேர்ந்த விவசாயி பரசுராமன் (வயது 38) என்பவரை அரிவாளால் வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே பரசுராமன் பரிதாபமாக இறந்தார். இதை தடுக்க சென்ற அவரது மனைவி மேகலா (30), அண்ணாமலை (50), கோவிந்தி, (55), முனியம்மாள் (45), புகழேந்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொலை தொடர்பாக, சாமல்பட்டி போலீசார் 19 பேர் மீது, வழக்குப்பதிவு செய்து ஜிம் மோகன் (37), வெற்றிவேல் (27), வேடியப்பன் (43), ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனிடையே தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில், சாமல்பட்டியை சேர்ந்த வேடியப்பன் (24), வேல்முருகன், (23), விஜய், (26), மேட்டூரை சேர்ந்த கோபிநாத் (43), ஆகிய 4 பேர் நேற்று, அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 4 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story