நெல்லை அருகே வாகன சோதனை: காரில் கொண்டு சென்ற ரூ.8.39 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
நெல்லை அருகே தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.8 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தாழையூத்து,
நெல்லை அருகே தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.8 லட்சத்து 39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறக்கும் படை சோதனை
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் 60 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் இரவு, பகலாக வாகன சோதனை நடத்தி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்காணித்து வருகிறார்கள்.
நெல்லையை அடுத்த தாழையூத்து வாகன சோதனைச்சாவடியில் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை கூட்டுறவு அதிகாரி முருகேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தனர். இந்த பறக்கும் படையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ஏட்டு மனோகரன் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
ரூ.8 லட்சம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி பறக்கும் படைனர் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த 2 பேரிடம் ரூ.8 லட்சத்து 39 ஆயிரத்து 780 இருந்தது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடியில் 3 நாள் வசூல் செய்த பணம் என்பதும், இதற்கு உரிய ஆவணங் கள் ஏதுவும் இல்லாமல் தனியார் வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரி முருகேசன் பறிமுதல் செய்தார். பின்னர் அந்த பணம் நெல்லை தாசில்தார் சுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கூடுதல் துணை தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. உரிய ஆவணத்தை காண்பித்து பணத்தை பெற்றுச்செல்லலாம் என அந்த 2 பேரிடமும் பறக்கும் படையினர் ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story