மேலப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம்: “நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுப்பேன்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு


மேலப்பாளையத்தில் தேர்தல் பிரசாரம்: “நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுப்பேன்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 10:00 PM GMT (Updated: 29 March 2019 7:41 PM GMT)

“நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுப்பேன்“ என்று நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.

நெல்லை, 

“நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுப்பேன்“ என்று நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கூறினார்.

அ.தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்

நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் நேற்று காலை மேலப்பாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

மனோஜ் பாண்டியன் அம்பை ரோடு, வி.எஸ்.டி. பள்ளிவாசல், ஆசாத் ரோடு, அண்ணா வீதி வழியாக மேலநத்தம் கருப்பந்துறை ஆகிய பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

பின்னர் அங்கு இருந்து குறிச்சி, குலவணிகர்புரம், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருடைய ஜீப்புக்கு முன்பு கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சி கொடியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பிரசாரத்தின் போது, மனோஜ்பாண்டியன் பேசியதாவது:-

குரல் கொடுப்பேன்

சேரன்மாதேவி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தபோது அந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றினேன். குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றினேன்.

எனது தந்தையும் (பி.எச்.பாண்டியன்) இந்த தொகுதியில் உறுப்பினராக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். சிறுபான்மை மக்களின் தேவை என்ன? என்று அறிந்தவன் நான். உங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவேன். இந்த தேர்தலில் நீங்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பி.க்கள்.- கூட்டணி கட்சி நிர்வாகிகள்

பிரசாரத்தில், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், நெல்லை கூட்டுறவு பேரங்காடி முன்னாள் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வட்ட செயலாளர் சண்முகசுந்தரம், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முகமலி அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி, பொருளாளர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் சிவா, பா.ம.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ரமேஷ் செல்வன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தொகுதி பொறுப்பாளர் துரை பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராதாபுரம் யூனியன்

நெல்லை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் நேற்று முன்தினம் இரவு ராதாபுரம் யூனியனில் பிரசாரம் செய்தார். அவர், திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

Next Story