கொளத்தூர் அருகே நடமாட்டம்: சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
கொளத்தூர் அருகே நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். அதில் ஆட்டை கட்டிப்போட்டு உள்ளனர்.
கொளத்தூர்,
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்துள்ளது அய்யங்காடு கிராமம். வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவரது வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று கடித்துக்கொண்டு இருந்தது.
அப்போது அந்த நாயின் சத்தம் கேட்ட ராஜ்குமாரும், அவரது குடும்பத்தாரும் வந்து பார்த்தனர். அங்கு நாயை சிறுத்தை கடித்துக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த சிறுத்தையை பட்டாசு வெடித்து விரட்டினர். சிறுத்தை கடித்ததில் அந்த நாய் காயத்துடன் உயிர் தப்பியது.
இதுகுறித்து ராஜ்குமார் மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடம் போன்றவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் சிறுத்தை நடமாட்டம் குறித்து உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக அப்பகுதியில் கூண்டு ஒன்றையும் வைத்துள்ளனர். அந்த கூண்டில் சிறுத்தைக்கு இரையாக உயிருடன் ஒரு ஆட்டையும் கட்டி போட்டுள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த சிறுத்தை அந்த பகுதியில் 3 ஆடுகளை கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story