பள்ளிபாளையம் பகுதியில் ஈரோடு தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்


பள்ளிபாளையம் பகுதியில் ஈரோடு தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்
x
தினத்தந்தி 30 March 2019 3:00 AM IST (Updated: 30 March 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்ற மணிமாறனுக்கு ஆதரவாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று பள்ளிபாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.

பள்ளிபாளையம், 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்ற மணிமாறனுக்கு ஆதரவாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று வாக்கு சேகரித்தார். பள்ளிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சமயசங்கிலி பகுதியில் காலை 9 மணியளவில் ஈஸ்வரன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்து அவர் பிரசாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து தொட்டிபாளையம், சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், எளையாம்பாளையம், வெள்ளப்பாறை, களியனூர், சில்லாங்காடு, வண்ணாம்பாறை, தெற்குபாளையம், வெடியரசம்பாளையம், மாதேஸ்வரன் கோவில், ஒட்டமெத்தை உள்பட ஒன்றியத்திற்கு உட்பட்ட 55 இடங்களில் மாலை 4 மணி வரை அமைச்சர் தங்கமணி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது பல இடங்களில் கரும்பு தோட்டங்களில் வேலை செய்து கொண்டு இருந்த விவசாயிகளிடமும் அவர் ஓட்டு கேட்டார்.

அப்போது அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களை தமிழகத்துக்கு தந்துள்ளார். அதேபோல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வழியில் நலத்திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளார். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்தியில் இருந்து பெறுவதற்கு தற்போது 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

குமாரபாளையம் தொகுதியில் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ரூ.35 கோடியில் புதிய பாலம், எஸ்.பி.பி. காலனியில் ரூ.45 கோடியில் உயர்மட்ட மேம்பாலம், ரூ.400 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். தற்போது ஏழைகளின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தில் பிறந்தவர். விவசாயிகளின் பிரச்சினைகள், ஏழைகளின் துன்பங்களை அறிந்தவர். எதிரி மு.க.ஸ்டாலினுக்கும் துரோகி டி.டி.வி.தினகரனுக்கும் பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெங்கு என்ற மணிமாறன் கூப்பிட்ட குரலுக்கு செவிமடுத்து ஓடோடி வருபவர். உங்கள் பிரச்சினைகளை அவர் தீர்ப்பார். எனவே நாமக்கல் மாவட்டத்திலேயே குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் அனைவரும் மணிமாறனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

நிகழ்ச்சிகளில் பள்ளிபாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில், நகர செயலாளர் வெள்ளிங்கிரி, தொகுதி செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட வக்கீல் பிரிவு சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர் திருமூர்த்தி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகிலன், பாசறை நிர்வாகிகள், சார்பு மன்ற நிர்வாகிகள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் மாதேஸ்வரன், ரவி, களியனூர் ரவி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் முத்துசாமி, வெங்கடேஷ், த.மா.கா. வெங்கட், தே.மு.தி.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியின் நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story