சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டி சின்னங்கள் ஒதுக்கீடு


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டி சின்னங்கள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 29 March 2019 11:30 PM GMT (Updated: 29 March 2019 9:14 PM GMT)

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 13 வேட்பாளர்களுக்கான சின்னங்களை அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

அரியலூர், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்கனவே அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 25 வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனையின் போது 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, தகுதியுடைய அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் இளவரசன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சிவஜோதி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரவி உள்பட மொத்தம் 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளரான டி.தினேஷ் நேற்று முன்தினம் தனது வேட்பு மனுவினை வாபஸ் பெற்றார். நேற்று சுயேச்சை வேட்பாளரான கே.பிரபாகரன் தனது வேட்பு மனுவினை வாபஸ் பெற்றார். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை சிதம்பரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தொகுதி பொது பார்வையாளர் குல்கர்னி முன்னிலையில், அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி வெளியிட்டார். 15 வேட்பாளர்கள் பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 2 வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றதால் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்கள் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக அறிவித்து, இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான சின்னங்களை அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி வெளியிட்டார்.

13 வேட்பாளர்களின் பெயர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம் வருமாறு:-

1.பி.சந்திரசேகர் (அ.தி.மு.க.)- இரட்டை இலை

2.தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)- பானை

3.ஏ.இளவரசன் (அ.ம.மு.க.)- பரிசுப்பெட்டி

4.எம்.சிவஜோதி(நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி

5.டி.ரவி (மக்கள் நீதி மய்யம்)- டார்ச் லைட்

6.எஸ்.பார்வதி (தேசிய மக்கள் சக்தி கட்சி)- கால்பந்து

7.எம்.கிருஷ்ணராஜ் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)- மைக் (ஒலிவாங்கி)

8.ஆர்.கலையரசன் (சுயேச்சை)- மழிப்பான் (ரேஸர்)

9.டி.கிட்டு (சுயேச்சை)- பிரஷர் குக்கர்

10.ஏ.கிருஷ்ணகுமாரி (சுயேச்சை)- குளிர்சாதன பெட்டி (ஏ.சி.)

11.பி.குருசாமி (சுயேச்சை)- காலிபிளவர்

12.டி.பெரியசாமி (சுயேச்சை)- மட்டை பந்தடி வீரர்

13.எம்.ஜெகதீசன் ( சுயேச்சை)- கைப்பெட்டி.

Next Story