எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்தது உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்


எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்தது உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்
x
தினத்தந்தி 30 March 2019 3:45 AM IST (Updated: 30 March 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்ததால், அவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

பெரம்பலூர், 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வினை 4,595 மாணவர்களும், 4,182 மாணவிகளும் என 8,777 பேர் எழுத தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்கு 37 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்வுக்கும் மாணவர்கள் தயாராகுவதற்காக இடைவெளி விடப்பட்டு தேர்வு நடைபெற்றது. மொழித் தேர்வான தமிழ், ஆங்கிலம் முதல் தாள், 2-ம் தாள் ஆகியவை இந்த ஆண்டு மதியம் நடந்தது. மற்ற தேர்வுகளான கணிதம், அறிவியல், சமூகஅறி வியல் தேர்வு வழக்கம்போல் காலையில் நடைபெற்றது. நேற்று எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கு கடைசி தேர்வான சமூக அறிவியல் பாடத் தேர்வு காலையில் நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் நேற்று தேர்வு அறைக்கு வந்தனர். காலை 10.15 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 12.45 மணிக்கு முடிந்தன. இந்த தேர்வினை 4,516 மாணவர்களும், 4,132 மாணவிகளும் என மொத்தம் 8,648 பேர் எழுதினர். 81 மாணவர்களும், 44 மாணவிகளும் என 125 பேர் சமூக அறிவியல் தேர்வினை எழுத வரவில்லை.

நேற்றுடன் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவடைந்ததால், கடைசி தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவ- மாணவிகள் உற்சாகமாய் துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியதை காணமுடிந்தது. சிலர் பேனா மையை, சக மாணவ-மாணவிகளின் ஆடைகளில் தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் மாணவ- மாணவிகள் தேர்வு நன்றாக எழுதியிருப்பதாகவும், தேர்வு முடிந்த உற் சாகத்திலும் வெற்றி இலக்கை குறிக்கும் வகையில் தங்களது கட்டை விரலை உயர்த்தி காண்பித்து மகிழ்ந்தனர். மாணவ- மாணவிகளுக்கு சில ஆசிரியர்கள் கோடை விடுமுறையை எப்படி பயனுள்ளதாக கழிப்பது, அடுத்து படிக்க போகும் மேல்நிலை படிப்பு குறித்தும் ஆலோசனைகளை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

மாணவ- மாணவிகள் தங்களுக்கு பாடங்களை கற்பித்து கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அதனை கண்ட ஆசிரியர்களின் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்ததை காண முடிந்தது. மேலும் சிலர் தங்களது நண்பர்களை விட்டு எப்படி பிரிந்து இருக்கப்போகிறோம் என்று சற்று கவலையுடன் வீடு திரும்பினர். முன்னதாக சமூகஅறிவியல் தேர்வு குறித்து மாணவ -மாணவிகள் கூறுகையில், கணித தேர்வு மிக கடினமாகவும், அறிவியல் தேர்வு சற்று கடினமாகவும் இருந்தது. ஆனால் சமூக அறிவியல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது. இதனால் இந்த தேர்வினை நன்றாக எழுதியுள்ளோம் என்றனர்.

Next Story