பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆ.ராசா பேச்சு


பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆ.ராசா பேச்சு
x
தினத்தந்தி 29 March 2019 10:00 PM GMT (Updated: 29 March 2019 9:35 PM GMT)

பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பெரம்பலூரில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா தெரிவித்தார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் சின்னப்பா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரான ஆ.ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரான தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் பேசுகையில், காழ்ப்புணர்ச்சியில் என்னை கல்வி கொள்ளையர் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்து வருகிறார். நான் படிப்படியாக உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன் என்றார்.

இதனை தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசுகையில், 2 ஜி-ல் நான் செய்தது தான் புரட்சி என்று நீதிமன்றம் சென்று நிரூபித்து குற்றமற்றவன் என வெளிவந்தவன் நான். பெரம்பலூர் எம்.பி.யாக இருந்தபோது நான் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு வர வேண்டிய எல்லா தொழிற்சாலைகளும் தற்போது கொல்கத்தா, குஜராத்துக்கு சென்று விட்டன. தமிழகத்தில் பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காரணம் அரசியலமைப்புச் சட்டமே தவிர ராமதாஸ் அல்ல. நமக்கு ஒரு சமூக கடமை உள்ளது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றத் துடிக்கும், ஜனநாயக, சமதர்ம, மதசார்பற்ற தன்மைக்கு பங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் இப்போதைய பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,

பாரிவேந்தர் தனது கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி நாடறிந்த கல்வி நிறுவனங்களின் அதிபராக உருவெடுத்துள்ளார். இவரது வளர்ச்சியை பிடிக்காத பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பொறாமையில் இவரைப்பற்றி அவதூறு பரப்பி வருகிறார் என்றார். இதில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் அன்பழகன் வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் அழகுவேல் நன்றி கூறினார். இதையடுத்து பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங் களில் பாரிவேந்தரை ஆதரித்து ஆ.ராசாவும், தொல்.திருமாவளவனும் பிரசாரம் செய்தனர்.

Next Story