கீரமங்கலம் பகுதியில் கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபடும் வெளிமாநில தொழிலாளர்கள் டிராக்டரில் குடும்பத்துடன் வந்து தோட்டத்தில் தங்குகின்றனர்
கீரமங்கலம் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் டிராக்டர்களில் வந்து தோட்டங்களில் தங்கி இருந்து, கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டு முழுவதும் கரும்பு வரத்து இருந்தது. ஆனால் அதன் பிறகு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்ட கீரமங்கலம், வடகாடு மற்றும் மேற் பனைக்காடு உள்பட சுற்றி யுள்ள கிராமங்களில் கரும்பு பயிரிடுவதை விவசாயிகள் குறைத்துவிட்டனர்.
இதனால் ஒரு ஆண்டில் சில மாதங்கள் மட்டுமே ஆலை இயக்கப்பட்டு வருகிறது. கரும்பு அதிகமாக பயிரிடப்பட்டு இருந்த காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, கரும்பு வெட்ட தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகளே முன்பணம் கொடுத்து தொழிலாளிகளை அழைத்து வந்து கரும்புகளை வெட்டினார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு பதிலாக மராட்டியம் போன்ற வடமாநிலங்களில் இருந்து கரும்பு வெட்டும் தொழிலாளர்களை அழைத்து வந்து, கரும்பு வெட்டி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கூலி உயர்வு போன்ற காரணங்களால், கரும்பு வெட்டும் வேலையில் வெளிமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாக தெரிகிறது.
மராட்டியம் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கரும்பு வெட்ட வரும் தொழிலாளர்கள், குடும்பத்துடன் டிராக்டரில் வருகின்றனர். அவர்கள் வேலை நடக்கும் தோட்டங்களிலேயே தங்கி இருந்து கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபடுகின்றனர். கரும்புகளை ஆலைகளுக்கு ஏற்றிச்செல்ல டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு விவசாயத்திற்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், கரும்பு விவசாயம் குறைந்து உள்ளது. இதனால் கரும்பு வெட்டுவதற்கு மற்ற தொழில் செய்ய வருவது போல, இந்தி பேசும் வெளிமாநில தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக வந்து தங்கி வேலை செய்கிறார்கள். ஆனால் இவர்கள் கரும்பு தோட்டங்களை தீ வைத்து எரித்துவிட்டு, கரும்பு அறுவடை செய்வதால் விவசாயிகளுக்கு கரும்பு எடை குறைகிறது என்கின்றனர்.
இது குறித்து மராட்டியத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் கூறுகையில், எங்கள் மாநிலங்களில் கூலி வேலைகள் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் வேலை கிடைப்பதால், இங்கு வந்து தங்கி இருந்து வேலை செய்கிறோம். கரும்பு தோட்டத்தில் தீ வைக்கும்போது, தோகைகள் எரிந்துவிடும். இதனால் கரும்பு வெட்டும் வேலை எளிமையாக இருக்கும். தற்போது கரும்பு வெட்டும் நாங்கள் இந்த வேலை முடிந்ததும் மாற்று வேலை செய்வோம். அல்லது வேறு பகுதியில் கரும்பு வெட்டும் வேலை இருந்தால், அங்கு டிராக்டரில் குடும்பத்துடன் செல்வோம். ஆண்டுக்கு சில முறை சொந்த ஊர்களுக்கு செல்கிறோம், என்றனர்.
Related Tags :
Next Story