பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் 13 கிராம விவசாயிகள் முற்றுகை
பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி 13 கிராம விவசாயிகள் மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட உலையூர், பிரபக்கலூர், இளங்காக்கூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை சேர்ந்த 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை கோரிக்கை மனுக்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– 13 கிராம விவசாயிகளுக்கு கடற்த 2017–18–ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பிட்டு தொகை முழுமையாக வழங்கபடவில்லை. மற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 13 கிராம விவசாயிகள் மட்டும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால், வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் பார்த்து நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசின் நிவாரண தொகை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. விவசாயத்தையும், அரசையும் நம்பி ஏமாந்துபோய் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உடனடியாக இழப்பீடு தொகை வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.