மாதம் ஒரு முறை மட்டுமே தூக்குப்பாலம் திறப்பு கப்பல்கள் திரும்பிச்சென்றன


மாதம் ஒரு முறை மட்டுமே தூக்குப்பாலம் திறப்பு கப்பல்கள் திரும்பிச்சென்றன
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 30 March 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

மாதம் ஒரு முறை மட்டுமே தூக்குப்பாலம் திறக்கப்படும் என்ற ரெயில்வே அதிகாரிகளின் அறிவிப்பால் கப்பல்கள் திரும்பிச் சென்றன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் வழியாக கப்பல்கள் கடந்து சென்று வருகின்றன. கப்பல்கள் பாலத்தை கடக்க வரும்போது பாம்பனில் உள்ள துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். பின்னர் ரெயில்வே அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தூக்குப்பாலம் திறக்கப்பட்டு கப்பல்கள் செல்லும். கடந்த சில வருடங்களாக வாரத்தில் ஒரு நாள் மட்டுமே கப்பல்கள் கடந்து செல்ல ரெயில்வே துறையால் தூக்குப்பாலம் திறந்து மூடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூக்குப் பாலத்தை கடந்து செல்ல சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து மும்பை செல்ல இழுவைக் கப்பல் ஒன்று பெரிய மிதவைக்கப்பலை இழுத்தபடி கடந்த 24–ந் தேதி பாம்பன் பகுதிக்கு வந்து வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.பின்னர் தூக்குப் பாலத்தை கடக்க துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்ப கடிதமும் கொடுக்கப்பட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

அப்போது ரெயில்வே அதிகாரிகள் தூக்குப் பாலம் பழமையான பாலமாக உள்ளதால் அடிக்கடி திறந்து மூட முடியாது, மாதம் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் என ரெயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 5 நாட்களாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் காத்திருந்த இழுவைக்கப்பல் மிதவைக் கப்பலை இழுத்தபடியும், கோவாவில் இருந்து கல்கத்தா செல்ல வந்த பெரிய சரக்கு கப்பலும் சர்வதேச கடல் வழியாக சுற்றிச்செல்ல நேற்று பாம்பனில் இருந்து திரும்பி சென்றன.

இதுபற்றி துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:– 100 ஆண்டுகளுக்கு மேலாக தூக்குப்பாலம் முறையாக திறக்கப்பட்டு கப்பல்கள் மற்றும் படகுகள் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் தூக் கடந்து செல்கின்றன. ஆனால் தற்போது இனி தூக்குப்பாலம் மாதத்தில் ஒருமுறை மட்டுமே கப்பல்கள்,படகுகள் கடந்து செல்ல திறக்கப்படும் என ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.ரெயில்வே அதிகாரிகளின் இந்த அறிவிப்பால் பாம்பன் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து முழுமையாக முடங்கி போய் விடும். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story