மிரா ரோடு என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.1¼ கோடி சம்பளத்துடன் வேலை கூகுள் நிறுவனம் வழங்கியது
மிரா ரோடு என்ஜினீயரிங் மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் ரூ.1¼ கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்து உள்ளது.
மும்பை,
மிரா ரோடு என்ஜினீயரிங் மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் ரூ.1¼ கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்து உள்ளது.
என்ஜினீயரிங் மாணவர்
தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா கான் (வயது 21). இவர் மிராரோடு கிழக்கு பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார்.
அப்துல்லா கானுக்கு கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும்போதே மென்பொருள் தொழில்நுட்ப துறையில் ஆர்வம் அதிகம். எனவே இணையதளங்களில் நடத்தப்படும் மென்பொருள் (சாப்ட்வேர்) தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்வார்.
இந்தநிலையில், அவர் கூகுள் நிறுவனம் நடத்திய மென்பொருள் போட்டி ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார். அதன் மூலமாக அந்த நிறுவனம் அப்துல்லா கானின் திறமை பற்றி தெரிந்து கொண்டு உள்ளது.
கூகுளில் வேலை
இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் கூகுள் நிறுவனம் வேலை வாய்ப்பு அளிக்க தயாராக இருப்பதாக அப்துல்லா கானுக்கு இ-மெயில் அனுப்பியது. அதை பார்த்து அப்துல்லா கான் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
இதன்பின்னர் அவருக்கு கூகுள் நிறுவனம் ஆன்-லைனில் சில தேர்வுகளை நடத்தியது. அதிலும் மாணவர் அப்துல்லா கான் சிறப்பாக பங்கு பெற்று கூகுள் நிறுவனத்தை ஈர்த்தார். இதையடுத்து அவர் நேரடியாக லண்டனில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார்.
ரூ.1¼ கோடி சம்பளம்
அங்கு நடந்த நேர்முக தேர்விலும் அப்துல்லா கான் தேர்ச்சி பெற்றார். கூகுள் நிறுவனம் அப்துல்லா கானுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்தை சம்பளமாக கொடுக்க முன்வந்துள்ளது.
மிரா ரோடு வாலிபர் கூகுள் நிறுவனத்தில் வேலை பெற்றது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர் படித்த கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்துல்லா கான் கூறுகையில், ‘‘விளையாட்டுக்காக தான் நான் மென்பொருள் தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டேன். கூகுள் போன்ற நிறுவனங்கள் இணையதளத்தில் எங்களின் படைப்புகளை பார்ப்பார்கள் என்பது கூட எனக்கு தெரியாது. கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்வதை நான் எதிர்நோக்கி உள்ளேன். அங்கு பணியில் சேர்வது எனக்கு அற்புதமான அனுபவத்தை தரும் என்றார்.
அப்துல்லா கான் வரும் நவம்பர் மாதம் கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர உள்ளார்.
Related Tags :
Next Story