இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் - தனியார் நிறுவன ஊழியர் கைது


இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் - தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 30 March 2019 4:08 AM IST (Updated: 30 March 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த கேசவன்புதூரை சேர்ந்தவர் பிரவின்ஜோஸ் (வயது 27), நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் சீதப்பால் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலிக்க தொடங்கினர். அப்போது இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக பிரவின்ஜோஸ் கூறியுள்ளார். அதன்படி அந்த பெண்ணுக்கும், பிரவீன் ஜோசுக்கும் திருமணம் நடந்தது. காதல் திருமண ஜோடி தனியாக ஒரு வீடு எடுத்து தங்களது வாழ்க்கையை தொடங்கினர்.

இந்தநிலையில் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பிரவீன்ஜோஸ் மீது அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிரவீன்ஜோஸ் என்னை காதலித்து வந்தார். நாங்கள் இருவரும் வெளியூர் சென்று சில நாட்கள் தங்கினோம். மேலும் பள்ளிவிளையில் ஒரு வாடகை வீட்டில் திருமணம் செய்யாமல் கணவன்- மனைவி போல் வாழ்ந்தோம். மேலும் திருமணம் செய்வதாக கூறி என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். எனவே பிரவீன் ஜோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்ஜோசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது, ஒரே நேரத்தில் 2 பெண்களையும் பிரவீன் ஜோஸ் காதலித்து வந்ததும், அதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story