தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி உலக சாதனை படைத்த சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு


தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி உலக சாதனை படைத்த சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 30 March 2019 4:30 AM IST (Updated: 30 March 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோமீட்டர் தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி உலக சாதனை படைத்த சிறுவனுக்கு தேனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேனி,

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஜெய் ஜஸ்வந்த் (வயது 10). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இவர் நேற்று முன்தினம் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை 28 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி சாதனை படைத்தான். அவர் இந்த தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி கடந்து உலக சாதனை படைத்தான்.

சாதனை படைத்த ஜெய் ஜஸ்வந்த் தனது சொந்த ஊருக்கு நேற்று திரும்பி வந்தான். அவனுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து அல்லிநகரம் வரை திறந்த ஜீப்பில் பயணம் செய்தபடி சிறுவன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டான்.

வழிநெடுகிலும் பொதுமக்களும், வியாபாரிகளும் நின்று வரவேற்பு அளித்தனர். பல்வேறு அமைப்புகள், சங்கங்களை சேர்ந்தவர்கள் சிறுவனுக்கு பூமாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை அணிவித்து பாராட்டினர். சாதனை சிறுவனை ஊர்வலமாக அழைத்து வரும் தகவல் அறிந்ததும், தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் ஊர்வலத்தில் பங்கேற்று சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அத்துடன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், சிறுவனுக்கு பாராட்டு கடிதம் கொடுத்து அனுப்பினார். வரவேற்பு நிகழ்ச்சியில் நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார், தேனி மாவட்ட நீச்சல் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் சுமதி, துணை தலைவர்கள் செந்தில்நாராயணன், பிரேம்சாய் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story