‘‘பெரியாரை இழிவுபடுத்திய எச்.ராஜாவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்’’ சிவகங்கை பிரசாரத்தில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
‘‘தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிவரும் எச்.ராஜாவுக்கு தேர்தலின் மூலம் தக்க பாடம் புகட்டுங்கள்’’ என்று கூறி சிவகங்கை தொகுதி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.
சிவகங்கை,
நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் காசிலிங்கம் என்ற இலக்கியதாசன் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சிவகங்கையில் பிரசாரம் செய்தார். சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
கலைஞர் கருணாநிதி இல்லாத நிலையில் நடைபெறும் தேர்தல் இது. ஆனால் அவர் என்றுமே நம்முடைய ஊனோடும் உதிரத்தோடும் கலந்து இருக்கிறார். அவர் மகனாக உங்களின் ஆதரவை கேட்க வந்துள்ளேன். மானம் காத்த மருதுபாண்டியர் மண்ணிற்கு, சிவகங்கை சீமைக்கு வந்துள்ளேன். தேர்தலின் மூலம் நீங்கள் தமிழகத்தின் மானத்தையும், நாட்டின் மானத்தையும் காக்க வேண்டும்.
18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தல் எடப்பாடி பழனிசாமி அரசை அப்புறப்படுத்தும் தேர்தல் என்று உங்களுக்கு தெரியும். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை உங்களுக்கு நன்றாக தெரியும். அவரை பற்றி உங்களுக்கு நான் கூற வேண்டியதில்லை. கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள், ‘‘கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல’’ என்று. கார்த்தி சிதம்பரம் வாரிசு அடிப்படையில் நிற்கவில்லை, அவர் தகுதியின் அடிப்படையில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பற்றி உங்களுக்கு தெரியும். என்னை பொறுத்தவரை அவரை எதிர்க்கட்சி வேட்பாளர் என்று பார்க்கவில்லை. நாட்டில் அவரை போல ஒரு தவறான அரசியல்வாதியை இதுவரை நான் பார்க்கவில்லை. தமிழ் சமுதாயத்தின் நல்லெண்ணத்தையும், அமைதியையும் கெடுக்கும் வகையில் பேசுவது, அவதூறாக பேசுவதுதான் அவரது தொழிலாக உள்ளது.
தந்தை பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தி பேசி வரும் எச்.ராஜாவுக்கு இந்த தேர்தலின் மூலம் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
சுப்பிரமணியசுவாமி பா.ஜனதா கட்சிகாரார். அவர்அண்மையில் கூறிய ஒரு கருத்து என்ன தெரியுமா? மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது என்பதுதான். மேலும் அவர் எழுதிய ஒரு கட்டுரையில், ‘‘இந்தியா பொருளாதார வீழ்ச்சியை நோக்கி செல்கிறது’’ என்று கூறியுள்ளார்
பா.ஜனதா அரசு கடந்த 5 ஆண்டில் விவாயிகளுக்கு ஏதாவது செய்தார்களா? இந்தியாவில் 60 சதவீதத்துக்கு மேல் மக்கள் கிராமத்தில்தான் வசிக்கின்றனர். எனக்கு எதிரே கொடுமையான வெயிலில் நீங்கள் உட்கார்ந்துள்ளீர்கள். அது போலத்தான், மத்திய பா.ஜனதா ஆட்சியும் கொடுமையான ஆட்சி.
கடந்த தேர்தலின் போது மோடி அறிவித்த எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வீதிக்கு வந்து பேட்டி தருகிறார். எப்போதாவது இது போல் நடந்துள்ளதா? மதசார்பற்ற இந்தியாவை உருவாக்கியுள்ளார்களா? நீட் தேர்வால் மரணம் அடைந்த அனிதாவுக்கு நீதி கிடைத்ததா? மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளதா? ஸ்மார்ட் சிட்டி திட்டம் உருவாகி உள்ளதா? ஆனால் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து கூறினால் தேச விரோத சக்தி என்கிறார்கள்.
ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழ்மையான குடும்பங்களுக்கு ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவித்துள்ளார்கள். நிச்சயம் அந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.
முதல்–அமைச்சராக இருந்த போது, கருணாநிதி யாரும் கேட்காமலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தார். ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தார். தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீராக உள்ளது என்று கூறுகிறார்கள். தினம் ஒரு போராடடம் நடக்கிறது.
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தினார்கள். தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரில் கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் 17 கர்ப்பிணிகள் இறந்து போனார்கள் என்று செய்தி வருகிறது. மருத்துவ துறையிலேயே இப்படி தவறு நடந்தால் ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள்?
எனவே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். 10–ம் வகுப்பு படித்த ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்கப்படும். 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நல பணியாளர் பணி வழங்கப்படும். கிராமப்புற பெண்களுக்கு வட்டி இல்லாமல் ரூ.50 ஆயிரம் கடன் உதவி அளிக்கப்படும்.
மானாமதுரையில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் விடுபட்ட பகுதிகளுக்கு ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நிறைவேற்றுவோம். நாட்டார் கால்வாய், சுப்பன் கால்வாய் சீரமைக்கப்படும். காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தபடும்.
மானாமதுரை நகராட்சி ஆக்கப்படும். வைகை ஆற்றில் ஏராளமான குடிநீர் திட்டங்கள் இருப்பதால், அந்த பகுதி குடிநீர் மண்டலமாக அறிவிக்கப்படும். நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம். சொல்வதைத்தான் செய்வோம். எனவே நாடாளுமன்ற தேர்தலில் கார்த்தி சிதம்பரத்தையும், மானமாதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காசிலிங்கம் என்ற இலக்கியதாசனையும் அமோக வெற்றிபெறச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.