பட்டாசு தொழிலை பாதுகாக்க மாணிக்கம் தாகூரை டெல்லிக்கு அனுப்பி வையுங்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேச்சு


பட்டாசு தொழிலை பாதுகாக்க மாணிக்கம் தாகூரை டெல்லிக்கு அனுப்பி வையுங்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 30 March 2019 5:00 AM IST (Updated: 30 March 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலை பாதுகாக்க விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூரை வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–

மாணிக்கம்தாகூர் எம்.பி.யாக இருந்த போது கிராமங்களுக்கு சென்று 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களை சந்தித்தார். மாணிக்கம்தாகூரை தெரியாத கிராமத்து பெண்கள் இருக்க முடியாது. எல்லோருக்கும் மாணிக்கம்தாகூரை தெரியும். விவசாயிகள் கடன், கல்விக்கடன் ஆகியவை முழுமையாக தள்ளுபடி செய்ய ராகுலை பிரதமராக்க வேண்டும்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க மாணிக்கம்தாகூரை வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்பி வையுங்கள். சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சர் ஆவார். நாம் அதிகாரத்துக்கு வந்து விட்டால் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசும்போது, விருதுநகர் பட்டாசு தொழில், அச்சு தொழில், நூற்பு தொழில், நெசவு தொழில் என பல்வேறு தொழிகள் மிகுந்த மாவட்டம் ஆகும். ரூ.3½ லட்சம் கோடி அன்னியமுதலீட்டை கொண்டு வந்து விட்டதாக கூறும் முதல்–அமைச்சர் 8 லட்சம் மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழம் பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற மறுத்து விட்டார். பட்டாசு தொழிலை பாதுகாக்க மாணிக்கம்தாகூர் டெல்லி செல்ல வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பின்னர் மத்தியில் ராகுல் தலைமையிலும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து பேசிய மாணிக்கம்தாகூர் கூறியதாவது:–

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் நாம் 4 வி‌ஷயங்களை எடுத்துக்கூற வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் ஏழை மக்களுக்கான ரூ.72 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம், விவசாய மற்றும் கல்விக்கடன் முழுமையாக தள்ளுபடி, சிறு தொழில்களை பாதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி, கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் 300 பெண்களுக்கு தினசரி ரூ.300 ஊதியத்தில் 100 நாள் வேலை ஆகிய வி‌ஷயங்களை விளக்கி கூற வேண்டும். இத்தொகுதி மக்களுக்காக நான் உழைக்க தயாராக உள்ளேன். அதற்கு இத்தொகுதி மக்கள் வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜாசொக்கர், மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜூனன், இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story