கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தென்னஞ்சோலையாக மாற்றுவேன் - தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உறுதி


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தென்னஞ்சோலையாக மாற்றுவேன் - தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உறுதி
x
தினத்தந்தி 30 March 2019 4:58 AM IST (Updated: 30 March 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் தென்னஞ்சோலையாக மாற்றுவேன் என்று, தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் கூறினார்.

பேராவூரணி, 

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பேராவூரணியில் நடைபெற்றது.

கூட்டத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தென்னை விவசாயிகள் தவித்த போது, தென்னை வாரிய அதிகாரிகளை அழைத்தால், யாரும் எனது கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் நமது கையில் அங்குசம் இல்லாதது தான். இதனால் தான் யானையை அடக்க முடியவில்லை. அதிகார யானையை அடக்க, அங்குசத்தை (வாக்குகள்) தாருங்கள் என உங்களிடம் கேட்டு இங்கு வந்துள்ளேன்.

தஞ்சை தொகுதியில் நான் (பழனிமாணிக்கம்) நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் மாணவர்களின் கல்விக்கடன், விவசாயக்கடன், மீனவர்களின் கடன், சுயஉதவிக்குழுவினர் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்துவேன்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் மற்றும் தென்னை விவசாயம் அழிந்துள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளை மீண்டும் தென்னஞ்சோலையாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தென்னை வளர்ச்சி வாரியம் உதவியோடு இப்பகுதி தென்னை விவசாயிகள் கவலை தீரும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பழனிமாணிக்கம் கூறினார்.

கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story