மதுபோதையில் தாயிடம் தவறாக நடக்க முயன்றதால் கள்ளக்காதலனை அடித்து கொன்றேன் - கைதான வடலூர் பெண் பரபரப்பு வாக்குமூலம்


மதுபோதையில் தாயிடம் தவறாக நடக்க முயன்றதால் கள்ளக்காதலனை அடித்து கொன்றேன் - கைதான வடலூர் பெண் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 30 March 2019 4:58 AM IST (Updated: 30 March 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

மதுபோதையில் தாயிடம் தவறாக நடக்க முயன்றதால் கள்ளக்காதலனை அடித்து கொன்றேன் என்று கைதான வடலூர் பெண், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வடலூர்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தமுக்காணிமுட்டத்தை சேர்ந்தவர் அய்யாப்பிள்ளை என்கிற பூராசாமி (வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த 13-ந் தேதி கடலூர் மாவட்டம் வடலூருக்கு சென்று வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் அய்யாப்பிள்ளையின் அண்ணன் ராஜாராம் வடலூர் போலீசில் புகார் செய்தார். அதில், எனது தம்பி அய்யாப்பிள்ளை வடலூருக்கு வருவதாக கூறி வந்தார். ஆனால், அவர் இதுவரை எங்கள் ஊருக்கு திரும்பி வரவில்லை. எனவே மாயமான அவரை கண்டுபிடித்து தாருங்கள் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வடலூர் ஆர்.கே.நகரை சேர்ந்த பரிமளா(40) என்பவருக்கும், அய்யாப்பிள்ளைக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந் தது. இதைத்தொடர்ந்து பரிமளாவின் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் பரிமளாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அய்யாப்பிள்ளையை பரிமளா கொலை செய்து, பிணத்தை வீட்டின் பின்புறமுள்ள செப்டிக் டேங்கில் வீசியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பரிமளாவை போலீசார் கைது செய்தனர். அய்யாப்பிள்ளையை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசாரிடம் பரிமளா கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் அப்பாங்குறிச்சி எனது சொந்த ஊராகும். எனது கணவர் பெயர் சுந்தரமூர்த்தி. 2 குழந்தைகள் உள்ளனர். எங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை பார்த்து கொள்வதற்காக எனது கணவரின் நண்பர் அய்யாப்பிள்ளையிடம் கூறியிருந்தோம். அதன்படி அவர் விவசாய நிலங்களை கவனித்து வந்தார். இதனால் அய்யாப்பிள்ளை எங்களது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போது எனக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. எங்களது கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரிய வந்தது. அவர் எங்களை பலமுறை கண்டித்தார். இருப்பினும் கள்ளக்காதலை நாங்கள் கைவிடவில்லை. இதனால் மனவேதனை அடைந்த எனது கணவர் குழந்தைகளை அழைத்து கொண்டு என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் நானும், அய்யாப்பிள்ளையும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

இந்த நிலையில் அய்யாப்பிள்ளை மது குடித்து விட்டு வந்து அடிக்கடி என்னிடம் தகராறு செய்தார். எனவே நான் சிங்கப்பூருக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் பணஉதவி பெற்று வடலூரில் உள்ள ஆர்.கே.நகரில் சொந்தமாக வீடு கட்டினேன். கடந்த 2018-ம் ஆண்டு முதல் வடலூரிலேயே எனது தாயுடன் வசித்து வந்தேன். இது பற்றி அறிந்ததும் அய்யாப்பிள்ளை என்னை பார்ப்பதற்காக கடந்த 9-ந் தேதி வந்தார். அந்த சமயத்தில் நான், ஜெயங்கொண்டம் வாலிபருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தேன். இதை கேட்டு கொண்டிருந்த அவர் என்னிடம் அந்த வாலிபர் யார்? என்று கேட்டு தகராறு செய்தார். நான், அதையெல்லாம் கூற முடியாது என்றேன். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர் மயிலாடுதுறைக்கு சென்று விட்டார்.

பின்னர் கடந்த 13-ந் தேதி மீண்டும் என்னை பார்ப்பதற்காக அய்யாப்பிள்ளை, அவரது நண்பருடன் மது போதையில் வந்தார். உடனே நான் கதவை மூடினேன். அப்போது அய்யாப்பிள்ளை அளவுக்கு அதிகமாக மது குடித்திருப்பதாகவும், இன்று இரவு மட்டும் உங்களுடன் தங்க வைத்து கொள்ளுங்கள் என்று அவரது நண்பர் கெஞ்சினார். இதையடுத்து கதவை திறந்து அவரை வீட்டுக்குள் அனுமதித்தோம். உடனே அவரது நண்பர் அங்கிருந்து சென்று விட்டார். மதுபோதையில் இருந்த அய்யாப்பிள்ளை என்னையும், எனது தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்தார்.

பின்னர் எனது தாயிடம் அவர் தவறாக நடக்க முயன்றார். அதை நான் தடுக்க முயன்றபோது என் னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அய்யாப்பிள்ளையை அடித்து, கீழே தள்ளி விட்டேன். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாத வகையில் வீட்டின் பின்புறமுள்ள செப்டிக் டேங்கில் போட்டு விட்டேன். இதனை கண்டு பிடித்த போலீசார், என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த கொலையை போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக பரிமளாவின் தாய் சரஸ்வதி(70), அரியலூர் மாவட்டம் தேவமங்கலத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் தமிழரசன்(36), வடலூர் ரோட்டு மருவாயை சேர்ந்த ராமலிங்கம்(66) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story