வேட்பு மனு வாபஸ் முடிந்தது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு புதுவையில் 18 பேர் போட்டி


வேட்பு மனு வாபஸ் முடிந்தது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு புதுவையில் 18 பேர் போட்டி
x
தினத்தந்தி 30 March 2019 5:30 AM IST (Updated: 30 March 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 18 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி,

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 27-ந் தொடங்கியது. போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவது நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தேர்தல் அதிகாரியான அருணிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான 26-ந்தேதி வரை 30 பேர் 37 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு பரிசீலனை 27-ந்தேதி நடந்தது. அப்போது மாற்றுவேட்பாளர்கள், டெபாசிட் செலுத்தாதவர்கள், மனுக்களை சரிவர பூர்த்தி செய்தவர்கள் என 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பின் 18 பேர் எஞ்சியிருந்தனர். அவர்கள் தேர்தலி போட்டியிட விரும்பாவிட்டால் தங்களது வேட்பு மனுக்களை நேற்று பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வேட்புமனுக்களை திரும்பப்பெற யாரும் முன்வரவில்லை. இதனால் புதுவை எம்.பி. தொகுதியில் 18 பேர் போட்டி உறுதியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது. மேலும் வேட்பாளர்களுக்கான சின்னங்களும் நேற்றே ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் களத்தில் இருக்கும் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களும் வருமாறு:-

1. வைத்திலிங்கம் (காங்கிரஸ்) - கை சின்னம்

2. டாக்டர் நாராயணசாமி என்ற நித்தியானந்தம் (என்.ஆர்.காங்) - ஜக்கு

3. தமிழ்மாறன் (அ.ம.மு.க.) - பரிசு பெட்டி

4. டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் (மக்கள் நீதி மய்யம்) - டார்ச் லைட்

5. ஷர்மிளா பேகம் (நாம் தமிழர் கட்சி) - கரும்பு விவசாயி

6. பாத்திமாராஜ் (பகுஜன் சமாஜ்) - யானை

7. அருணாசலம் (அகில இந்திய மக்கள் கழகம்) - வாளி

8. திருஞானம் (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) - பலாப்பழம்

9. பாஸ்கரன் (புதுச்சேரி வளர்ச்சி கட்சி) - டிராக்டர் ஓட்டும் விவசாயி.

10. முத்து (இந்திய சோசலிஸ்ட் ஒற்றுமை மையம்) - கியாஸ் சிலிண்டர்

11. மோதிலால் (கம்யூனிஸ்டு-எம்.எல்.) - மூன்று நட்சத்திரம் உள்ள கொடி.

12. ராமதாஸ் (சுயே) - தொலைக்காட்சி பெட்டி

13. கிருஷ்ணமூர்த்தி (சுயே)- கெண்டி.

14. தங்கவேலு (சுயே) - கால் பந்து

15. திராவிட மங்கை என்ற லூர்துமேரி (சுயே) - சிலேட்டு

16.பாலாஜி (சுயே) - கிரிக்கெட் மட்டை (பேட்)

17.ரமேஷ் (சுயே) - மைக்

18.ராமமூர்த்தி (சுயே) - விசில்

வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒரு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால் புதுவையில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் நோட்டாவுக்கும் ஓரிடம் ஒதுக்கப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் யூனிட்) வைக்கப்படும். 2-வது எந்திரத்தின் கடைசியில் நோட்டா இடம்பெறும். புதுவையில் வாக்குப்பதிவுக்கு தேவையான எந்திரங்கள் இருப்பதாகவும், அதனால் கூடுதலாக எந்திரங்களை வரவழைக்க வேண்டிய தேவையில்லை எனவும் மாவட்ட துணை தேர்தல் அதிகரி சக்திவேல் தெரிவித்தார்.

புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையின் முடிவில் 10 பேர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வாபஸ் பெற கடைசி நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர்களான ரமேஷ், வேல்முருகன் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனர். இதன்படி 8 பேர் தற்போது களத்தில் உள்ளனர்.

நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அவர்களுக்குரிய சின்னங்களுடன் வெளியிடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

1.நெடுஞ்செழியன் (என்.ஆர்.காங்.)-ஜக்கு

2.வெங்கடேசன் (தி.மு.க.)-உதயசூரியன்

3.முருகசாமி (அ.ம.மு.க.)-பரிசுப்பெட்டி

4.கவுரி (நாம் தமிழர் கட்சி)-கரும்பு விவசாயி

5.ரவிசங்கர் (புதுச்சேரி வளர்ச்சி கட்சி)-டிராக்டர் ஓட்டும் விவசாயி

6.ஸ்ரீதர் (தமிழக வாழ்வுரிமை கட்சி)-பலாப்பழம்

7.தமிழ்மல்லன் (சுயேட்சை) -கால்பந்து

8.மன்னாதன் (சுயேட்சை)-தொலைக் காட்சி

Next Story