செயற்கைக்கோள்கள் மட்டும் அறிந்த விண்கல் வெடிப்பு


செயற்கைக்கோள்கள் மட்டும் அறிந்த விண்கல் வெடிப்பு
x
தினத்தந்தி 30 March 2019 2:41 PM IST (Updated: 30 March 2019 2:41 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த ஒரு விண்கல் வெடித்துச் சிதறியது, சில செயற்கைக்கோள்கள் தவிர வேறு யாராலும் கவனிக்கப்படாமலே போயிருக்கிறது.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி சரியாக முற்பகல் 11.48மணிக்கு அந்தப் பெரிய விண்கல், ஒரு நெருப்புக் கோளமாய் வெடித்துச் சிதறியிருக்கிறது. விண்ணில் இருந்து பூமியை நோக்கி வினாடிக்கு 19 மைல் வேகத்தில் சீறிப் பாய்ந்துவந்த அந்த விண்கல், பேரிங் கடலுக்கு மேலாக 15.9 மைல் தொலைவில் வெடித்திருக்கிறது.

இந்த நிகழ்வு குறித்த விவரங்கள் தற்போதுதான் வெளிவந்திருக்கின்றன. இந்த விண்கல் வெடிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தவர்களில் ஒருவர், பீட்டர் பிரவுன். மேற்கு ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் விண்வெளியியல் துறையின் விண்கல் ஆய்வாளர்.

அணு ஆயுத சோதனைகளால் வளிமண்டலத்தில் நிகழும் வெடிப்புகள் தொடர்பான, அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் பதிவுகளை கடந்த 8-ந் தேதி ஆராய்ந்து கொண்டிருந்தார், பீட்டர். டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டவை அப்பதிவுகள்.

‘‘அப்போது, குறிப்பிட்ட விண்கல் வெடிப்பினால் ஏற்பட்ட ஒலி அலைகள் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கண்டேன். அத்தகைய வெடிப்பு மட்டும் உங்களுக்கு அருகில் நிகழ்ந்திருந்தால், உங்கள் செவிப்பறை கிழிந்திருக்கும்’’ என்கிறார், பீட்டர்.

குறிப்பிட்ட விண்கல் வெடிப்பை, அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான செயற்கைக்கோள்கள் உடனடியாக அறிந்திருக்கின்றன. ஆனால் மார்ச் 8-ந் தேதிதான், அதுகுறித்து அமெரிக்க விமானப் படை, ‘நாசா’வுக்கு முறைப்படி தெரிவித்திருக்கிறது. உடனே நாசா, பூமியை நோக்கி வரும் எரிகற்கள் குறித்து தாம் 1988-ம் ஆண்டு முதல் சேகரித்துவரும் தரவு தளத்தில் இதைப் பதிவு செய்திருக்கிறது. இந்தத் தகவலை, நாசா அதிகாரிகளில் ஒருவரான லிண்ட்லே ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.

நாசாவின், பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் குறித்த ஆய்வு மையம், குறிப்பிட்ட விண்கல் வெடித்ததால் வெளியான சக்தியின் அளவு 173 கிலோ டன்கள் என்று மதிப்பிட்டுள்ளது. இது, ஜப்பான் ஹிரோஷிமாவில் 1945-ம் ஆண்டு போடப்பட்ட அணுகுண்டின் 15 கிலோ டன் சக்தியுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகமாகும்.

ரஷ்ய நகரமான செல்யாபின்சுக்கு மேலே 2013-ம் ஆண்டு வெடித்த விண்கல்லுக்குப் பிறகு தற்போது நிகழ்ந்த விண்கல் வெடிப்பு அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவில் வெடித்த அந்த விண்கல் வெளிப்படுத்திய சக்தி 440 கிலோ டன் ஆகும். அதனால், சுமார் ஆயிரத்து 500 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர், வெடித்துச் சிதறிய கட்டிட ஜன்னல் கண்ணாடிகளால் காயம் அடைந்தவர்கள்.

Next Story