தேடப்படும் குற்றவாளியாக ‘சிறுவனின்’ படம்


தேடப்படும் குற்றவாளியாக ‘சிறுவனின்’ படம்
x
தினத்தந்தி 30 March 2019 10:03 AM GMT (Updated: 30 March 2019 10:03 AM GMT)

தேடப்படும் குற்றவாளியின் சிறுவயது படத்துடன் சுவரொட்டி வெளியிட்ட சீன போலீசாரின் செயல், கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகி இருக்கிறது.

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள ஸென்ஜியாங் பகுதி போலீசார் அந்தச் சுவரொட்டியை வெளியிட்டனர்.

அச்சுவரொட்டியில், ஒரு தொடக்கப்பள்ளிப் பருவ வயதுச் சிறுவன், நீல நிறச் சட்டை அணிந்தபடி, அப்பாவியாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.

படத்தின் கீழே, ‘ஜி ஹிங்காய், ஆண், ஹான் இனத்தைச் சேர்ந்தவர், பொது இடத்தில் தொந்தரவு ஏற்படுத்திய வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார். இவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் போலீசாரிடம் தெரிவிக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் குற்றவாளியின் அடையாள அட்டை எண்ணையும் வெளியிட்டிருக்கின்றனர்.

சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள குற்றவாளியின் படம் சரியானதுதான், ஆனால் அது அவரது சிறுவயதுப் படம்.

போலீசார் இதுபோல் 100 குற்றவாளிகளின் படங்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் நான்கு பேர், ‘சிறுவர்கள்’. அதாவது குற்றவாளிகளின் சிறுவயது படங்கள்.

ஆனால், மேற்கண்ட ஹிங்காயின் படம்தான் பரபரப்பாகப் பரவியது. சீன சமூக வலைதளங்களில் இப்படம் வைரலானதும், பலரும் போலீசாரை கடுமையாக கிண்ட லடிக்கத் தொடங்கிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து, தங்களின் இச்செயலுக்காக போலீசார் மன்னிப்புக் கேட்டனர். அதேநேரம், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, தமது நடவடிக்கையை நியாயப்படுத்தி இருக்கின்றனர்.

குறிப்பிட்ட போலீஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘குற்றவாளியின் புதிய படம் இல்லாததால்தான் அவரது பழைய படம் பயன்படுத்தப்பட்டது’’ என்றார்.

மற்றொரு போலீஸ் அதிகாரியான லியு, செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘குற்றவாளியை நாங்கள் எடுத்த படம் தெளிவாக இல்லை. அதனால்தான் அவரது ‘பழைய’ படத்தைப் பயன்படுத்தினோம்’’ என்று விளக்கம் அளித்தார்.

மேலும் அவர், ‘‘படத்தில் குற்றவாளியின் உடல் பாகங்களைக் கவனியுங்கள். அவரது மூக்கு, கண்கள், காதுகள், வாய், புருவங்கள் என எதுவுமே மாறவில்லை. இவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தெரிவிக்கலாம்’’ என்றார்.

தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறப்பதாகக் கூறிக்கொள்ளும் சீனாவிலும் இதுபோன்ற ‘சிறுபிள்ளைத்தனமான’ தவறுகள் அரங்கேறுகின்றன.

Next Story