குடிகாரர்களைத் ‘தேடும்’ கொசுக்கள்


குடிகாரர்களைத் ‘தேடும்’ கொசுக்கள்
x
தினத்தந்தி 30 March 2019 4:06 PM IST (Updated: 30 March 2019 4:06 PM IST)
t-max-icont-min-icon

மதுபானம் அருந்துவதற்கும், கொசு கடிப்பதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? இது தொடர்பாக, அமெரிக்க கொசு கட்டுப்பாட்டு சங்கத்தின் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

ஒருவர் மதுபானம் குடித்திருந்தால் அவர் வழக்கத்தைவிட அதிகமாக கொசுக் கடிகளுக்கு உள்ளாகிறார்.

ஆனால், மது அருந்தியவர்களை மட்டும் கொசுக்களால் எப்படிக் கண்டறிய முடிகிறது என்ற கேள்விக்கு பலராலும் தெளிவாகப் பதிலளிக்க முடியவில்லை.

சாதாரணமாக, மனிதர்கள் மூச்சு விடும்போது வெளியிடும் கார்பன் டையாக்சைடு மற்றும் ஆக்டோனால் ஆகியவற்றைக் கொண்டே கொசுக்கள் ஒருவரைக் கண்டுபிடித்துக் கடிக்கின்றன.

மதுபானம் அருந்தியவரைக் கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் இருக்குமா?

இதுகுறித்து அமெரிக்கா பிலடெல்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தான்யா டாப்கே, ‘‘மதுபானம் குடித்த ஒருவரைக் கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனெனில் மதுபானம் குடித்தவரின் ரத்தத்தில் ஆல்கஹாலின் சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும். அந்த நபரின் ரத்தத்தைக் குடிக்கும் கொசுவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றே நான் கருதுகிறேன்’’ என்கிறார்.

இதே கேள்விக்கு விடையளிக்கும் வகையில், அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பூச்சியியல் துறை பேராசிரியர் கோபி ஸ்சால் எழுதிய கட்டுரையில், ‘‘சுமார் 10 கோப்பை அளவு மதுபானம் பருகிய ஒருவரது ரத்தத்தில் 0.2 சதவீதம் அளவுக்கு ஆல்கஹால் இருக்கும். ஆனால், அந்த நபரின் ரத்தத்தைக் குடிக்கும் கொசுவுக்கு அதனால் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை’’ என்று கூறுகிறார்.

இப்படி மதுபானம் கொசுவின் செயல்பாட்டில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாதற்கு அதன் பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொசு குடிக்கும் திரவங்கள் நேரடியாக அதன் செரிமான மண்டலத்துக்குச் சென்று நொதித்தல் வினைக்கு உட்படுவதால், அது பூச்சியின் மத்திய நரம்பு மண்டலத்தை அடைவதில்லை என்று கருதப்படுகிறது.

‘‘கொசுக்கள் மட்டுமின்றி அனைத்து விதமான பூச்சிகளும் குடிக்கும் சாறுகள் நேரடியாக அவற்றின் உடல் முழுவதும் பரவுவதில்லை. பூச்சிகளின் செரிமான மண்டலத்தில் நடைபெறும் நொதித்தல் நிகழ்வின்போது மதுபானம், பாக்டீரியா உள்ளிட்ட தீமை விளைவிப்பவை தனியே வெளியேற்றப்படுகின்றன’’ என்று கூறுகிறார், லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் மூத்த அதிகாரியான எரிக்கா மெக்கலிஸ்டர்.

‘‘மது அருந்தியவரைக் கடிப்பதால் கொசுவின் செயல்பாட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், பழ ஈக்களில் வெளிப்படையாக மாற்றத்தைக் காண முடிகிறது. அவை மதுபானம் கலந்த திரவத்தைக் குடித்தவுடன், மிகுந்த உற்சாகத்தை அடைகின்றன’’ என்று அவர் மேலும் கூறுகிறார்.

மதுபானம் தவிர, ‘ஏ’ ரத்த வகையைக் கொண்டிருப்பவரைவிட, ‘ஓ’ ரத்த வகை கொண்டிருப்பவர் கொசுக்களால் கடிபடுவதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அதிக உடல் வெப்பத்தைக் கொண்டிருப்பவர், கர்ப்பிணிகள், அதிகளவு கார்பன் டையாக்சைடை வெளியிடுபவர் ஆகியோரை கொசுக்கள் அதிகளவில் கடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Next Story