பெண்களைக் கவரும் ‘பூ அலங்காரம்’
சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி பகுதி பெண்களுக்கு, விதவிதமான பூக்களை கொண்டும், வித்தியாசமான பொருட்களை கொண்டும் தங்களது ஜடை முடியை அலங்கரிக்கும் பழக்கம் உண்டு.
பல வண்ண மலர்களின் இதழ்களை, ஒரு கோர்வையாக சேர்த்து ஜடையை அலங்கரிப்பதும், மலர்களோடு வேறுசில பொருட்களை கொண்டு அலங்கரிப்பதும் அவர்களுக்கு கைவந்த கலை. ஆனால் இந்த ஜடை அலங்கார கலாசாரத்தை சென்னை போன்ற நகர பகுதிகளில் காண்பது அரிதான ஒன்றுதான். சமீபத்தில் இத்தகைய ஜடை அலங்காரங்களும் புது டிரெண்டாகி வருகின்றன. இதற்கு சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவரான ஜீவா கிருஷ்ணமூர்த்தியும் ஒரு காரணமாகிறார். இவரது கைவண்ணத்தில் விதவிதமான ஜடை அலங்காரங்கள் உருவாகின்றன. உடுத்தும் உடையின் வண்ணத்திற்கு ஏற்ப, புதுப்புது நிறங்களில் ஜடை அலங்கார மலர்களை உருவாக்குகிறார். பச்சை நிறத்தில், தங்க நிறத்தில், சிவப்பு- வெள்ளை கலவையில்... என இவரது ஜடை அலங்கார மலர் கோர்வைகள் ரசிக்க வைக்கின்றன. இதுமட்டுமா...? முந்திரி-பாதாம், பொம்மைகள் போன்றவற்றை கொண்டும் ஜடை முடியை அழகுப்படுத்துகிறார். இதுபற்றி ஜீவா கிருஷ்ணமூர்த்தி கூறுவதை கேட்போம்.
‘‘நான் கிருஷ்ணகிரியை சேர்ந்தவள். அதனால் ஜடை அலங்காரம் என்பது எனக்கு கைவந்த கலை. என்னுடைய வித்தியாசமான ஜடை அலங்காரங்களை சென்னை மக்கள் வியப்பாக பார்த்தனர். என் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் தோழிகள், என்னுடைய ஜடையை அலங்கரிக்கும் வித்தியாசமான மலர் கோர்வைகளை, கட்டித்தரும்படி கோரிக்கை விடுப்பதுண்டு. குறிப்பாக திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளில் வித்தியாசமான ஜடை அலங்காரத்துடன் தோன்றுவதற்காக, என்னை அணுகுவதுண்டு. ரோஜா இதழ், தாமரை இதழ், மல்லிகை பூ மொட்டுகள் என நமக்கு பழக்கமான மலர்களுடன் ஜர்புரா, பிரெசியா, மேரிகோல்ட், டியூப் ரோஸ்... போன்ற அலங்கார மலர்களின் இதழ்களையும் சேர்த்து புதுமையான வண்ணங்களில் மலர் அலங்காரம் செய்து கொடுத்திருக்கிறேன். மேலும் பெண்கள் விரும்பும் வண்ணங்களிலும், திருமண ஆடைகளின் நிறத்திற்கு ஏற்றார் போன்றும் ஜடை அலங்காரங்களை உருவாக்குகிறேன்.
நவீன கால பெண்கள் மலர்களை தவிர்த்து புதுவிதமான அலங்காரங்களை கேட்கிறார்கள். அப்படி உருவானதுதான் முந்திரி ஜடை அலங்காரம். இதில் மலர்களுடன் முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் சேர்க்கப்பட்டிருக்கும். மேலும் இயற்கை பூ இதழ்களின் மீது வண்ணம் பூசப்பட்ட அலங்காரங்களையும் உருவாக்குகிறேன். ஊர் வழக்கமும், என்னுடைய பட்டப்படிப்பும்... என்னை புதுவிதமான ஜடை அலங்காரங்களை உருவாக்க வைத்தது’’ என்கிறார், ஜீவா.
பயோஇன்பர்மேட்டிக்ஸ் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் ஜீவா, பெண்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பதைவிட இதுபோன்ற சிறுதொழில்களில் ஈடுபடுவது சிறந்தது என்கிறார்.
‘‘கிராமங்களில் இரண்டு மூன்று தோழிகள் சேர்ந்து அவர்களது குடும்பத்திற்கு தேவையான பூ மாலைகளை உருவாக்குவார்கள். இதற்காக மாலை நேரத்தில் தோழிகள் அடங்கிய சிறப்பு அமர்வும் நடக்கும். ஆனால் சென்னையில் எல்லாமே ரெடிமேட்தான். இந்த நடைமுறைதான் என்னுடைய முயற்சிக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. ‘பூ அலங்காரம்’ தொழில் முயற்சியில் இறங்குவதற்கு முன், தனியார் நிறுவனங்களில் பணிபுரியலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருந்ததால், வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்டும் சிறுதொழிலில் இறங்கினேன். சில ஆயிரங்கள் மட்டுமே முதலீடு என்பதாலும், ஆர்டரின் பேரில் வேலை செய்வதாலும் நஷ்டம் என்ற வார்த்தை வெகு குறைவாக பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய கால இளம்பெண்கள் திருமணம் முடிந்து, குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்கையில் வேலைக்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். நல்ல விஷயம் என்றாலும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பதை விட வீட்டில் இருந்தபடியே இது போன்ற எதார்த்தமான சிறுதொழில்களை செய்வது லாபகரமானதாக இருக்கும். அதேசமயம் நல்ல வருமானமும் கிடைக்கும், மேலும் குடும்ப தலைவிகளுக்கான நேர மேலாண்மையும் மேம்படும்’’ என்பவர், தன்னுடைய தோழிகளுக்கு எதார்த்தமான சிறுதொழில்களையும் கற்றுக்கொடுக்கிறார். ஜீவாவின் தொழில்முயற்சிகளுக்கு அவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி உறுதுணையாக இருக்கிறார். இவர்களுக்கு தர்ஷன் மற்றும் சவுந்தர் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story