ஆரணி அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து காணிக்கை பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஆரணி அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரணி,
ஆரணி– சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகரில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கோவில் நிர்வாகி முருகன் வந்தபோது கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்கும்போது அங்கு இருந்த 2 உண்டியல்களில் ஒரு உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
மற்றொரு உண்டியல் திறக்கப்படாமல் அப்படியே இருந்துள்ளது. இதனால் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த உண்டியலில் காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்திருக்கலாம் என்றும் மற்றொரு உண்டியலை உடைக்க முடியாததால் அவர்கள் அங்கிருந்து சென்றிருக்கலாம் எனவும் தெரிகிறது.
மேலும் அதே பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள விநாயகர் கோவிலிலும் கேட்டில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உண்டியல் எந்த சேதமும் இல்லாமல் இருந்தது.
அதேபோல் ஆரணி டவுன், அருணகிரிசத்திரம் பகுதி பாட்சா தெருவில் உள்ள ஸ்ரீ கில்லா சுந்தர விநாயகர் கோவிலிலும் கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் முத்தாலம்மன் மற்றும் கில்லா சுந்தர விநாயகர் கோவில் உண்டியல்களில் காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதியானது.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் ஆரணி தாலுகா, ஆரணி டவுன் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற போலீசார் அது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். தற்போது போலீசார் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும், மர்மநபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.