குடியாத்தம், வாணியம்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீட்டில் வருமானவரி சோதனை


குடியாத்தம், வாணியம்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீட்டில் வருமானவரி சோதனை
x
தினத்தந்தி 31 March 2019 4:45 AM IST (Updated: 30 March 2019 9:12 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம், வாணியம்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் அருகே உள்ள அணங்காநல்லூர் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கே.சக்கரவர்த்தி. தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினராகவும், வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவராகவும், குடியாத்தம் ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும் இருந்தவர். தற்போது ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில், பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகள் செய்து வருகிறார்.

வேலூர் மாவட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் துரைமுருகன் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் அணங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தில் உள்ள சக்கரவர்த்தி வீட்டில் 8 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சோதனை செய்ய வந்தனர். இந்த சோதனை தொடர்ந்து மாலை 4.30 மணி வரை நீடித்தது. சோதனை முடிந்ததும் சில ஆவணங்களை அவர்கள் அங்கிருந்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதேபோல் வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரான இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் சென்னை வருமான வரித்துறை அதிகாரி நாராயணன் சவுடா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்த அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு வீட்டில் இருந்த தேவராஜின் மனைவியிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தகவலை தெரிவித்து சோதனையை உடனடியாக மேற்கொண்டனர்.

நள்ளிரவு 2 மணி வரை நடந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றவில்லை.

Next Story