பெரும்பாலை அருகே வாகன சோதனையில் 300 சூட்கேஸ்கள் பறிமுதல்
பெரும்பாலை அருகே சரக்கு வேனில் கொண்டு சென்ற 300 சூட்கேஸ்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஏரியூர்,
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெரும்பாலை, ஒகேனக்கல், தொப்பூர், மஞ்சவாடி கணவாய், தீர்த்தமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். பெரும்பாலை அருகே உள்ள பழையூர் சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரி ரமா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 300 சூட்கேஸ்கள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேனில் வந்த கோவையை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரிடம் விசாரணை நடத்திய போது கோவையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் 300 சூட்கேஸ்களையும் பறிமுதல் செய்து பென்னாகரம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழி, தேர்தல் துணை தாசில்தார் ஆறுமுகம் ஆகியோரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து விட்டு சூட்கேஸ்களை பெற்று செல்லுமாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழி தெரிவித்தார்.
Related Tags :
Next Story